ADDED : ஆக 24, 2025 02:13 AM
புதுடில்லி:டில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. இன்றும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டில்லி மாநகரின் வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. சில சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதுகுறித்து, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டு அறைக்கு 10 புகார்கள் வந்ததாக அதிகாரிகள் கூறினர். சாலைகளில் தேங்கிய மழைநீர் ஒரு மணி நேரத்துக்குள் அப்புறப் படுத்தப்பட்டது.
சிவில் லைன்ஸ், செங்கோட்டை, லஜ்பத் நகர், நரேலா, பாவானா, அலிப்பூர் மற்றும் ஐ.டி.ஓ., உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை கொட்டித் தீர்த்தது.
டில்லி மற்றும் புறநகரில் இன்றும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வெப்பநிலை நேற்று 34.5 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட 0.3 டிகிரி செல்ஷியஸ் குறைவு என வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
காற்றில் ஈரப்பதம் நேற்று மாலை 5:30 மணிக்கு 76 சதவீதமாக பதிவாகி இருந்தது. காற்றின் தரக்குறியீடு மாலை 6:00 மணிக்கு 93ஆக இருந்தது. இது, திருப்திகரமான நிலை என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.