டில்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்; பொதுமக்கள் குறைதீர்ப்பு நிகழ்வில் அதிர்ச்சி
டில்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்; பொதுமக்கள் குறைதீர்ப்பு நிகழ்வில் அதிர்ச்சி
UPDATED : ஆக 21, 2025 10:21 AM
ADDED : ஆக 21, 2025 01:55 AM

டில்லி முதல்வர் ரேகா குப்தா மீது அடையாளம் தெரியாத நபர், நேற்று தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுமக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியின்போது நடந்த இந்த அசம்பாவிதத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டில்லியில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் ரேகா குப்தா முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது முதல், பொதுமக்களின் குறைகளை தீர்க்க, 'ஜன் சுன்வாய்' என்ற நிகழ்ச்சியை அவர் நடத்தி வருகிறார்.
அதன்படி, டில்லியில் உள்ள தன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது, முதல்வர் ரேகா குப்தாவிடம் மனு கொடுப்பது போல் நெருங்கி வந்த ஒருவர், சற்றும் எதிர்பாராத தருணத்தில் முதல்வரின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் நிலைகுலைந்து விழுந்த முதல்வர் ரேகா குப்தாவின் தலையில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பொதுமக்கள் குறை தீர்ப்பு நிகழ்வின்போது, முதல்வர் மீதே நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தாக்குதல் சம்பவத்திற்கு டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர், முதல்வரின் கன்னத்தில் அறைந்ததாக வெளியான தகவலை அவர் மறுத்தார்.
இந்த தாக்குதலுக்கு முன்னாள் முதல்வர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிஷி ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ''ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். ஆனால், வன்முறைக்கு இடமே கிடையாது. டில்லி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, கெஜ்ரிவால் தெரிவித்தார்.
- நமது சிறப்பு நிருபர் -