ADDED : ஆக 21, 2025 01:48 AM
புவனேஸ்வர்: ஒரே சமயத்தில் 5,000 கி.மீ., தொலைவில் உள்ள பல்வேறு இலக்குகளை தாக்கி அழிக்கும் மேம் படுத்தப்பட்ட 'அக்னி 5' ஏவுகணையின் சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.
'அக்னி 5' ஏவுகணை, மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 1,500 கிலோ அணுகுண்டை சுமந்து செல்லும் திறன் உடையது. இது ஒடிஷாவின் சண்டிப்பூர் ஒருங்கிணைந்த மையத்தில் நேற்று சோதிக்கப் பட்டது.
இது குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
'அக்னி 5' ஏவுகணை நேற்றைய சோதனையில் அனைத்து தொழில்நுட்ப மற்றும் இயக்க அளவீடுகளை துல்லி யமாக பூர்த்தி செய்தது .
இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை. 5,000 கி.மீ., துாரத்தில் உள்ள பல்வேறு இலக்குகளையும் ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறன் உடையது.
நாட்டின் நீண்ட கால பாதுகாப்பு தேவையை கருத்தில் வைத்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.