ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: முதல்வரை சந்தித்த பின் திருமா பேட்டி
ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: முதல்வரை சந்தித்த பின் திருமா பேட்டி
ADDED : ஆக 25, 2025 02:22 PM

சென்னை: 'ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது, நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரின் கோரிக்கையை முதல்வரிடம் தெரிவித்து உள்ளார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கவின் தந்தை சந்திரசேகரின் கோரிக்கைகளை முன் வைத்தேன்.
கூலிப்படைக்கு தொடர்பு
கவின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புகளை வழங்க வேண்டும். தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். அந்த கொலையில் கூலிப்படையினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அந்த கொலையில் குற்றவாளிகள் யாரும் தப்பித்து விடாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பார் என்று பெரிதும் நம்புகிறோம்.
தடுப்புச் சட்டம்
இந்த சந்திப்பில் ஆணவ கொலை தடுப்பு சட்டம் பற்றி பேசவில்லை. அது ஒரு அரசியல் கோரிக்கை. இப்போதைக்கு கவின் குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கைகள் பற்றி மட்டுமே பேசி இருக்கிறோம். ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது.
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்கனே சுட்டிக்காட்டி இருக்கிறோம். ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.