பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த உதவிக்கரம்: அறிவித்தார் பிரதமர் மோடி
பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த உதவிக்கரம்: அறிவித்தார் பிரதமர் மோடி
ADDED : ஆக 25, 2025 02:56 PM

புதுடில்லி: ''பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும்'' என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
3 நாட்கள் அரசு முறை பயணமாக டில்லி வந்துள்ள பிஜி நாட்டின் பிரதமர் சிதிவேனி ரபுகாவுடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, பிரதமர் மோடிக்கும், சிதிவேனி ரபுகாவிற்கும் இடையிலான பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் பரந்த ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட ஏழு ஒப்பந்தங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவும், பிஜியும் ஒரே பாதையில் பயணிக்கின்றன. வளமான இந்தியா- பசிபிக் பகுதியை ஆதரிக்கின்றன.
கடல்சார் பாதுகாப்புத் துறையில் பிஜி இந்தியாவிற்கு ஒரு முக்கியமான நாடு. பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இதற்காக ஒரு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும். உலக ஒழுங்கை உருவாக்குவதில் நாங்கள் கூட்டாளியாக இருக்கிறோம். காலநிலை மாற்றம் பிஜிக்கு ஒரு அச்சுறுத்தலாகும். பேரிடர் இழப்புகளை சமாளிக்க புதுடில்லி அதற்கு உதவும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.