ADDED : செப் 17, 2026 03:18 AM

பெங்களூரு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகாவுக்கு வர உள்ளார்.
அப்போது, பா.ஜ., தலைவர்களுடன், முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை கர்நாடகாவுக்கு வருகிறார். நாளை இரவு 10:00 மணிக்கு, ஹூப்பள்ளி விமான நிலையத்துக்கு வந்திறங்குவார். நகரின் தனியார் ஹோட்டலில் தங்குவார்.
மறுநாள் காலை, ஹூப்பள்ளியின், கப்பூரு பைபாஸ் அருகில், புதிதாக கட்டியுள்ள கே.எல்.இ., நிறுவனத்தின், 1,500 படுக்கைகள் கொண்ட அல்ட்ரா மாடர்ன் ஹைடெக் மருத்துவமனை மற்றும் புதிய மருத்துவ கல்லுாரியை அமித்ஷா திறந்து வைப்பார்.
அதன் பின், பெலகாவி மாவட்டம், சிக்கோடி தாலுகாவின், யக்சம்பா கிராமத்துக்கு அமித்ஷா வருகை தருவார். பா.ஜ., எம்.எல்.ஏ., சசிகலா ஜொல்லே, முன்னாள் எம்.பி., அன்னாசாஹேப் ஜொல்லேவுக்கு சொந்தமான பீரேஸ்வரா கோ - ஆப்பரேடிவ் கிரெடிட் சொசைடி புதிய கட்டடத்தை, திறந்து வைப்பார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பெருமளவில் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில், அவரது சொந்த மாவட்டமான பெலகாவிக்கு, மத்திய அமைச்சர் அமித்ஷா வர உள்ளார்.
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தில், தான் தங்கும் ஹூப்பள்ளியின் தனியார் ஹோட்டலில், பா.ஜ., தலைவர்களுடன், அமித் ஷா ஆலோசனை நடத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு, ஹூப்பள்ளி மற்றும் பெலகாவி மாவட்டங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, விமான நிலையங்கள், அவர் தங்கும் ஹோட்டல், நிகழ்ச்சி நடக்கும் இடங்களில், ஆயுதப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமித்ஷாவின் வருகை, பா.ஜ., தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
