விசேஷம் இது வித்தியாசம்: சாந்தி முகூர்த்தத்துக்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்?
விசேஷம் இது வித்தியாசம்: சாந்தி முகூர்த்தத்துக்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்?
PUBLISHED ON : நவ 08, 2026

நவ.,8 - தீபாவளி
என்றும், 16 வயதுள்ள, மார்க்கண்டேய மகரிஷி, காளிங்க புராணம் இயற்றினார். அதில், நரகாசுரன் பற்றி வித்தியாசமான தகவல்களை சொல்லியுள்ளார்.
பிரம்மாவால் படைக்கப்பட்டாள், பூமாதேவி. இவள், திருமாலின் தேவி ஆனாள். பூமாதேவியைக் கடத்தி, பாதாளத்தில் ஒளித்து வைத்தான், இரண்யாட்சன் என்னும் அசுரன். திருமால், வராக அவதாரம் எடுத்து, அவளைக் காப்பாற்றினார். அப்போது, அவள் மாதவிடாயில் இருந்தாள். அப்போது ஏற்பட்ட ஸ்பரிசத்தால், கர்ப்பம் தரித்தாள், பூமாதேவி.
இதையறிந்த பிரம்மா, கெட்ட நேரத்தில் கருவான அந்தக் குழந்தை பிறந்தால், மூன்று உலகங்களையும் அழித்து விடும் என, அறிந்தார். அடுத்த யுகம் வரும் வரை இந்தக் கருவை சுமக்க வேண்டும் என, பூமாதேவியிடம் கூறினார். ஆனால், அவளுக்கு குறிப்பிட்ட காலம் கடந்ததும் வலி ஏற்பட்டது. அவள், திருமாலிடம் முறையிட, அவர் தன் சங்கால் வயிறைத் தொட்டு, வலியைப் போக்கினார். பத்து மாதம் சுமக்க வேண்டிய பிள்ளையை, பல லட்சம் ஆண்டுகள் சுமந்ததால் தான், பூமாதேவியை பொறுமையின் சிகரம் என்பர்.
அப்போது, இன்றைய பீகாரின் ஒரு பகுதியான, விதேக நாட்டை ஆண்டு வந்தார், சீதையின் தந்தை, ஜனகர். அங்குள்ள யாக பூமிக்கு இரவு நேரத்தில் சென்ற, பூமாதேவி, அங்கேயே குழந்தையைப் பெற்றாள். ஜனகரிடம் சென்று குழந்தை பிறந்ததை தெரிவித்தாள், பூமாதேவி. யாக பூமிக்கு சென்ற ஜனகர், அந்தக் குழந்தை, ஒரு பிணத்தின் மீது தலை வைத்து படுத்திருப்பதைப் பார்த்தார்.
குழந்தைக்கு, நரகன் என, பெயர் வைத்தனர். இதற்கு, இருளில் பிறந்தவன் என, பொருள். அவனுக்கு பல கலைகளையும் கற்பித்தார், ஜனகர். பூமாதேவியும், காத்யாயனி என்ற பெயரில் ஒரு செவிலித்தாயாக தங்கி, அவனுக்கு நல்ல விஷயங்களைப் போதித்தாள். ஒருநாள், அவனது பிறப்பின் ரகசியத்தை மகனிடம் சொல்லி, தந்தை விஷ்ணுவிடம் அழைத்துச் சென்று, ஆசி பெற செய்தாள், பூமாதேவி. விஷ்ணு அவனுக்கு, ப்ராக்ஜோதிஷபுரம் என்ற நகரை ஒப்படைத்து, நல்வழியில் ஆட்சி செய்ய கட்டளையிட்டார். இன்றைய மகாராஷ்டிராவிலுள்ள, விதர்பா பகுதியைச் சேர்ந்த இளவரசி, மாயாவைத் திருமணம் செய்து வைத்தார். இருவரும் நல்லாட்சி புரிந்தனர்.
ஆனால், நரகனுக்கு கிடைத்த நண்பர்கள், அவனைக் கெடுத்து விட்டனர். அவன் அட்டூழியம் செய்ய ஆரம்பித்தான். பிரம்மாவிடம், தன் தாய் மூலமே தனக்கு மரணம் வேண்டும் என, வரம் பெற்றான். ஒரு யுகமும் ஓடி விட்டது. இதன்பின், பூமாதேவியை, சத்யபாமாவாக பிறப்பெடுக்க செய்த, விஷ்ணு, கிருஷ்ணராக அவதாரம் எடுத்து, அவளை மணந்தார். அவளது பழைய நினைவை மறக்க செய்தார். சத்யபாமா மூலமே நரகாசுரனை அழித்தார். நரகாசுரனின் மகன், பகதத்தனுக்கு முடி சூட்டினார்.
கெட்ட நேரத்தில் கருவுற்றதால் தான், நரகாசுரன் கெட்டவன் ஆனான். நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்காகவே, சாந்தி முகூர்த்தத்துக்கு நல்ல நேரம் குறிக்கின்றனர். புரிந்ததா?
தி. செல்லப்பா
