தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.கே.

'தி ண்ணை' நாராயணனுக்கு வெற்றிலை - சீவல் மெல்லும் பழக்கம்; குப்பண்ணா, அடிக்கடி வேர்க்கடலை பர்பியை சுவைப்பார். அதே போல், செய்தியாளர் ஒருவருக்கு, 'சுவிங்கம்' என்ற, இழுவை மிட்டாயை மெல்லும் பழக்கம் உண்டு.

'நச்நச்'சென்று, அவர், 'சுவிங்கம்'மை மெல்லும் சத்தம் கேட்டாலே எரிச்சலாகி விடுவார், லென்ஸ் மாமா.

அன்று, 'சுவிங்கம்'மை மென்றபடி வந்த செய்தியாளரிடம், 'ஏம்பா, இப்படி, 'சுவிங்கம்'மை எப்பப்பாரு மென்றபடி இருக்கிறீரே... வாய் வலிக்கவில்லையா?' என்று கேட்டார், மாமா.

'நீர் கூடத்தான், வெண்குழல் வர்த்தியை தொடர்ந்து ஊதித் தள்ளுகிறீர். நான், ஏதாவது கேட்கிறேனா...' என்றார், செய்தியாளர்.

கடுப்பான மாமா, 'சரி, 'சுவிங்கம்'மை யார் கண்டுபிடித்தது என்று சொல்லும்வே...' என்றார்.

'தெரியாது. 'சிகரெட்'டை யார் கண்டுப்பிடித்தது என்று உம்மால் சொல்ல முடியுமா?' என்று எதிர் கேள்வி கேட்டார், செய்தியாளர்.

'சிகரெட் பின்னாளில் தான் வந்தது. ஆரம்பத்தில் பழங்குடி மக்கள், விளையாட்டாக ஏதோ ஒரு இலையை சுருட்டி, நெருப்பு வைத்து புகைக்க, புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து, பலரும் அப்பழக்கத்தை தொடர்ந்தனர். இது கொஞ்சம் கொஞ்சமாக பரவி, பல ஆண்டுகளுக்கு பின்னரே, அந்த இலை, புகையிலை என்று அடையாளம் காணப்பட்டது. அதிலிருந்து, சுருட்டு, பீடி என, பரிணாம வளர்ச்சி பெற்று, பிற்காலத்தில், புகையிலைத் துாளை அடைத்து, புகைக்கும், 'சிகரெட்'டாக வளர்ச்சியடைந்தது.

'நீர் மெல்லும், 'சுவிங்கம்' உருவான வரலாறு தெரியுமா? கடந்த, 1870ல், ரப்பருக்கு மாற்றான பொருளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர், தென் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

'மயன் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் உலவி கொண்டிருந்தார், அந்த ஆராய்ச்சி குழுவில் இருந்த, தாமஸ் ஆடம்ஸ் என்ற ஆராய்ச்சியாளர்.

'அப்பழங்குடி மக்கள், ஏதோ ஒரு மரத்திலிருந்து, எதையோ பிய்த்தெடுத்து, வாயில் போட்டு சுவைத்ததைப் பார்த்தார், தாமஸ் ஆடம்ஸ்.

'அது என்ன என்று ஆராய்ந்ததில், அந்த மரத்தின் பெயர், 'சிக்லி' என்பதும், அதன் பிசின், உட்கொள்ளும் தன்மை கொண்டது என்றும் அறிந்தார். இனிப்பு சுவையுள்ள அந்த பிசினை, வாயில் போட்டு மென்றால், புத்துணர்வு ஏற்படுவதை உணர்ந்திருந்தனர், அப்பழங்குடி மக்கள்.

'இந்த ஆராய்ச்சியாளர் மூலமாக, அமெரிக்கா முழுவதும் இது பரவியது. இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்க வீரர்கள் இந்த பிசின், 'சுவிங்கம்'மை சுவைக்க, மற்ற நாடுகளுக்கும் பரவியது, இந்த இழுவை மிட்டாய்.

'தாடைக்கு வேலைக் கொடுக்கத்தான் ஆரம்பக்காலத்தில், 'சுவிங்கம்'மை, சிக்லி மர பிசினிலிருந்து தயாரித்தனர். இப்போது, செயற்கை பொருட்கள், சர்க்கரை மற்றும் வெவ்வேறு வாசனை கொண்ட, 'சிரப்' ஆகியவைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

'இப்படித்தான் எதையோ நினைத்து, எதையோ கண்டுபிடித்த வரலாறு ஏராளம் உண்டு. பிரட் சாண்ட்விச், கார்ன் பிளேக்ஸ் எல்லாம் இப்படி எதிர்பாராமல் கண்டுபிடிக்கப்பட்டது தான். ஒரு கண்டுபிடிப்பு, இன்னொரு கண்டுபிடிப்புக்கு வித்திடும் என்பது இதுதான்...' என்று முடித்தார், லென்ஸ் மாமா.

'ஐயோ மாமா. என்னை விட்டு விடுங்கள். உங்க அறிவும், அனுபவமும் வேற, 'லெவல்...' இனி, உம் எதிரில், 'சுவிங்கம்'மை மெல்லவே மாட்டேன்...' என்று கூறி, அந்த இடத்திலிருந்து, 'எஸ்கேப்' ஆனார், செய்தியாளர்.

ப

'வி யாபாரத்தில் ஜெயிப்பது எப்படி?' என்ற நுாலிலிருந்து படித்தது:

வணிகம் என்று எடுத்துக் கொண்டால், அதில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டியது ரொம்பவும் முக்கியம். ஒன்று, உற்பத்தி; இன்னொன்று, வியாபாரம்.

உற்பத்தி என்றால், ஏதோ பெரிய பெரிய திட்டங்கள் போட்டு, பெரிய பெரிய அளவில் உற்பத்தியை சுலபமாகச் செய்து விடலாம் என, பலரும் நினைக்கலாம். ஆனால், சிறு துரும்பைக் கூட, உற்பத்திக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மனோபாவம் இருக்கிறவர்கள் புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டே இருப்பர்.

அதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை கூறலாம்.

ஜப்பானியர் இருவர், தஞ்சாவூருக்கு வந்தனர். கரும்பு, நெல் பற்றி ஆய்வு செய்வதற்காக ஒரு பெரிய பண்ணையார் வீட்டில், பத்து நாட்கள் தங்கி இருந்தனர். அவர்களுக்கு தேவையான உணவை கொடுத்து விடுவார், பண்ணையார். கூடவே, கருமையும், செம்மையும் கலந்த நிறத்தில் இருக்கும் நல்ல முற்றின கரும்பை வெட்டிக் கொடுப்பார், பண்ணையார். அவர்களும் அதை விரும்பிச் சாப்பிடுவர்.

பத்து நாட்களுக்கு பின், அவர்கள் தங்கள் நாட்டுக்கு புறப்படத் தாயாராகினர். புறப்படும் சமயத்தில், ஜப்பானியர் இருவரும் சேர்ந்து, பண்ணையாருக்கு பெரிய சேவல் பொம்மை ஒன்றை தந்தனர். பண்ணையாருக்கு ரொம்ப ஆச்சர்யம்.

'இதை எப்படி செய்தீர்கள்? உங்கள் கையில் அதற்கான மூலப்பொருள் எதுவும் கிடையாதே?' என்று கேட்டார், பண்ணையார்.

'மூலப்பொருள் இல்லாம என்ன? தினமும், நீங்கள் எங்களுக்கு கரும்பு கொடுத்துக் கொண்டிருந்தீர்கள் இல்லையா? அந்தக் கரும்பைச் சுவைத்து சாப்பிட்ட பிறகு, அந்த சக்கையை வீணாக்காமல் சேர்த்து வைத்து, நேற்று இரவு அதை நன்றாக அடித்து ஒழுங்குபடுத்தி, சேவல் செய்து விட்டோம்...' என்றனர்.

'தோலை எல்லாம் என்ன செய்தீர்கள்?' என்று கேட்டார், பண்ணையார்.

'அதை பயன்படுத்தி, உங்களுக்கு கொடுப்பதற்கு ஒரு மணிபர்ஸ் செய்திருக்கிறோம்...' என்று கொடுத்தனர்.

அந்த கரும்பின் மேல் தோலை, கன்னாபின்னா என்று பிய்த்து கீழே போடாமல், பக்குவமாக உரித்து, அதை மணிபர்ஸ்க்கு வெளிப்பக்கமாக மெத்து மெத்தென்று வைத்து, உள்ளே அந்த சக்கையை அடைத்து, துணியை வைத்து, அருமையான மணிபர்ஸ் செய்திருந்தனர்.

கரும்பு சக்கையிலிருந்து, சேவலும், கரும்பு தோலிலிருந்து அருமையான மணிபர்ஸ் இரண்டையும் செய்து கொடுத்திருக்கின்றனர். வழக்கமாக இந்தக் கழிவுகள் ரெண்டையும் குப்பையில் போட்டு விடுவோம். ஆனால், அவர்கள் அதிலிருந்து ஒரு பொருளை உற்பத்தி செய்து விட்டனர்.

புதிது புதிதாக உற்பத்தி செய்கிற மனோபாவம் இருந்தால், சாதாரண ஒரு குப்பைப் பொருளைக்கூட, ஒரு மாபெரும் உற்பத்தி பொருளாக ஆக்கிவிட முடியும். இந்த மனோபாவம் தான் தொழில் செய்பவர்களுக்கு ரொம்ப முக்கியமாக இருக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us