தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

3


PUBLISHED ON : நவ 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சின்ன உதவி தான்!

என் நண்பரின் மகன், யாராவது ஒரு முதியவரை வண்டியின் பின்பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு போவதை அடிக்கடி பார்த்துள்ளேன்.

ஒருநாள், அந்த இளைஞரிடம், 'எப்போதும் யாராவது ஒரு முதியவரை உன் வண்டியில ஏற்றிக்கொண்டு போகிறாயே... முதியோர் இல்லம் ஏதாவது வைத்திருக்கிறாயா?' என்று கேட்டேன்.

'அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க. நான் கடை தெருவுக்கு போகும் போதும் சரி, வேற எங்கு போனாலும் சரி, வழியில் முதியவர்கள் யாராவது நடந்து செல்வதைப் பார்த்தால், அவங்களை என் வண்டியில் ஏற்றி, 5 கி.மீ., துாரத்தில் அவங்க வீடு இருந்தாலும், சிரமம் பார்க்காமல் போய் வீட்டுல இறக்கிவிட்டு வந்து விடுவேன். இந்த மாதிரி, முதியோர்களுக்கு உதவி செய்வதில் எனக்கு ஒரு சந்தோஷம்...' என்றான்.

இதைக் கேட்டதும், நண்பரின் மகனை பாராட்டினேன்.

— ம.வடுகநாதன், வேதாரண்யம்.

விவசாயத்துக்கு மாறிய இளைய தலைமுறை!

சமீபத்தில், எங்கள் ஊருக்கு வந்த, நான்கு இளைஞர்கள், மிகுந்த ஈடுபாட்டுடன் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருவதைக் கண்டேன். இதுபற்றி அவர்களிடம் விசாரித்தேன்.

அவர்கள் நால்வரும் பட்டதாரிகள். முன்பு, பல்வேறு தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்துள்ளனர். ஆனால், அங்கு கிடைத்த வருமானம் அவர்களின் குடும்பச் செலவுக்கு போதுமானதாக இல்லை. அதே வேளையில், பலரும் விவசாயத்தைக் கைவிட்டு, தொழிற்சாலை மற்றும் கம்பெனி வேலைக்கு செல்வதை கவனித்துள்ளனர்.

இவர்களது பெற்றோர், விவசாய கூலிகளாக வேலை பார்த்தவர்கள் என்பதால், விவசாய வேலைகளும் தெரிந்திருந்தது. உடனே, அவர்கள், தங்களது வேலையை விட்டுவிட்டு, எங்கள் ஊரைச் சேர்ந்த நில உரிமையாளர்களை நேரில் சந்தித்து, 'நாங்கள், உங்கள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து முறையாக பயிர் செய்கிறோம்...' என்று கூறி, ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

ஆரம்பத்தில் சிறிய அளவில் விவசாயம் செய்ய துவங்கிய இவர்கள், தற்போது படிப்படியாக விரிவுபடுத்தி இப்போது, 18 ஏக்கர் நிலத்தில் வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இன்றைக்கு கிராமப் பகுதிகளில் கூட, பல தொழிற்சாலைகள் வந்து விட்டதால், கம்பெனி வேலைக்கு சென்று விடுகின்றனர், பலர். விவசாய பணிக்கு ஆட்கள் கிடைப்பது சிரமம். நிலத்தின் உரிமையாளர்களால் வயல்களில் இறங்கி வேலை செய்ய முடிவதில்லை. வேறு வழியின்றி அந்த நிலங்களை அப்படியே தரிசாக விட்டு விடுகின்றனர். அப்படி விடப்படும் நிலங்களில் சீக்கிரமே முள் மரங்களும், புதர்களும் முளைத்து, ஒட்டுமொத்த விவசாய நிலமும் வீணாகிப் போய் விடுகிறது.

இத்தகைய கடினமான சூழலிலும், நிலத்தை குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வரும் இந்த இளைஞர்களின் முன்னெடுப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

—ர.பிரவின்புதா, புதுச்சேரி.

உழைப்பாளிக்கு ஆதரவு காட்டிய தோழி!

சமீபத்தில், சென்னை புறநகரில் குடியிருக்கும் தோழியை சந்திக்கச் சென்றிருந்தேன். அவள் வீட்டு வராண்டாவில் தோழியுடன் நான் பேசிக்கொண்டிருந்த போது, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வந்து, வீட்டைச் சுற்றி பூச்சி மருந்து அடித்து தருகிறேன்...' என்றார். அவரைப் பற்றி விசாரித்தபோது, 'எனக்கு ஐந்து பிள்ளைகள், அவர்களுக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தேன். சில மாதங்களுக்கு முன், மனைவி இறந்து விட்டாள். என் சொத்துக்களை அபகரித்து, என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டனர், என் மகன்கள்.

'பிழைக்க வழி தெரியாமல், பிச்சையெடுத்தேன், என் நிலையை கண்டு இரக்கப்பட்டு, பூச்சி மருந்து தெளிக்கும் முறையை கற்றுக்கொடுத்து, அதற்கான கருவியையும் கொடுத்தார், ஹோட்டல் ஊழியர் ஒருவர்.

'எனக்கு தெரிந்த, இதை வைத்து, வீடு வீடாக சென்று அவர்களின் அனுமதியுடன் கொசு, கரப்பான் பூச்சி, ஈ போன்ற பூச்சிகள் வீட்டுக்குள் வராமல் இருக்க, மருந்தடித்து பிழைப்பு நடத்துகிறேன்...' என்றார்.

உழைப்பாளியான அவரை ஊக்கப்படுத்த தன் வீட்டைச் சுற்றி, மருந்து அடிக்க அனுமதித்தாள், தோழி.

அதுமட்டுமல்லாமல், பெரியவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு, அண்டை வீட்டினரிடமும், அவரை பற்றிய விபரத்தைக் கூறி, அவர்கள் வீட்டிலும் மருந்தடிக்க உதவி செய்தாள்.

இப்போது, தினசரி 20 வீடுகள் என, மூன்று நாட்களில், சுழற்சி முறையில், 60 வீடுகளுக்கு, மருந்தடித்து அவர் தேவைக்குரிய பணத்தை சம்பாதித்து கொள்கிறாராம்.

'யாரும் இல்லை, பிழைக்க வழி தெரியவில்லை...' என்று கூறுபவர்கள் மத்தியில், இப்படியும் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.

உழைப்பதற்கு மனம் தான் தேவை.

— வீ. குமாரி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us