PUBLISHED ON : நவ 07, 2026

நெல்லை மாவட்டம், களக்காடு இ.சி.எம்., நடுநிலை பள்ளியில், 1962ல், 6ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியராக இருந்தார் ஆவுடையப்ப பிள்ளை. மனம் விட்டு சிரிக்கும் வகையில் கதைகள் கூறி பாடம் நடத்துவார். அவை மனதில் ஆழமாக பதிந்தன.
என் கையெழுத்து அவ்வளவு வடிவமாக இருக்காது. இதை கவனித்து, வடிவமாக எழுதி பயிற்சி பெற கூறினார். அதற்கு முயற்சிக்காதது கண்டு கைவிரல் மொழியில், ஸ்கேலால் அடித்து, 'வரி போட்ட நோட்டில் அன்றாடம் ஒரு பக்கம் எழுதி காட்ட வேண்டும்...' என உத்தரவிட்டார். அதை ஏற்று தவறாமல் எழுதி பயிற்சி பெற்றேன். சில நாட்களிலே கையெழுத்து தெளிவானது.
அந்த உற்சாகத்தில் பத்திரிகைகளுக்கு துணுக்கு எழுத ஆரம்பித்தேன். முதன் முதலில் நான் எழுதிய தமாஷ், ஒரு பத்திரிகையில் வெளியாகி, 1 ரூபாய் சன்மானம் கிடைத்தது. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இப்போது எனக்கு, 72 வயதாகிறது. அரசு ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். பத்திரிகைகளில் துணுக்கு, தமாஷ், கவிதை, கட்டுரை மற்றும் கேள்வி - பதில் பகுதிகளுக்கு, 55 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். பணி காலத்திலே ஜனாதிபதி விருது பெற்றிருந்த வகுப்பாசிரியர் ஆவுடையப்ப பிள்ளை தந்த ஊக்கமே இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. அவரை வணங்குகிறேன்.
- பி.சிவராம சுப்பிரமணியன், நெல்லை.
தொடர்புக்கு: 99442 84135
