/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
ராக மழை பொழியும் ராக்கிங் கேர்ல்ஸ்
/
ராக மழை பொழியும் ராக்கிங் கேர்ல்ஸ்
PUBLISHED ON : ஜன 14, 2025

இசைக்கு மயங்காத இதயம் இல்லை. மனம் வருடி உறவாடும் இசையில் மூச்சு முட்டி மூழ்கிக் கிடக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சிலருக்கு இசை பொழுதுபோக்கு; சிலருக்கு அதுவே அமைதி, ஆத்மதிருப்தி. ஆனால் நாடுகள் கடந்து எங்கோ ஓரிடத்தில் பிறந்து, வளர்ந்து இசை என்ற ஒற்றை ஆர்வத்தால் இணைந்தது, இந்த 'ராக்கிங் கேர்ல்ஸ்' குழு (பேண்ட்). 'வேலை என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன்' போல் இசை நிகழ்ச்சி என்று வந்துவிட்டால் எங்கே, எந்த வேலை இருந்தாலும் அதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு கச்சேரியை அமர்க்களப்படுத்தி விடுகின்றனர். இக்குழுவை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வரும் சென்னையை சேர்ந்த ரஞ்சிதா தேவியை சந்தித்தபோது...
விருட்சா குரூப் ஆப் கம்பெனியை இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். இந்த கம்பெனி சார்ந்து என்டர்டெய்ன்மென்ட் பிரிவில் இசை குழுக்களை உருவாக்கியுள்ளேன். 'இசை உலகில் ஆண்கள் தான் ஜாம்பவான்களாக இருக்க முடியுமா. பெண்களால் முடியாதா' என்ற கோணத்தில் யோசித்த போது இக்குழுக்களை உருவாக்க வேண்டும் என தோன்றியது.
தற்போது ராக்கிங் கேர்ல்ஸ், ராக்கிங் லேடிஸ் பேண்ட், ராக்கிங் பாய்ஸ் என பல குழுக்கள் உள்ளன. கேர்ல்ஸ் குழுவில் பள்ளி, கல்லுாரி மாணவிகள், இளம் பெண்கள், லேடிஸ் குழுவில் குடும்பத் தலைவி, ஐ.டி.,யில் பணியாற்றுவோர், தொழில் முனைவோர், இசைத் துறையில் சாதிக்கும் பெண்கள் என இசை மீது ஆர்வம், திறமையுள்ள பெண்களை இணைத்துள்ளோம். கச்சேரி இல்லாத நேரத்தில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அவர்களை மகிழ்விக்க பல இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். அனைவரும் பெண்கள் என்பதால் 'இசை நிகழ்ச்சிக்கான மேடை' கிடைப்பது ஆரம்பத்தில் சவாலாக இருந்தது. தற்போது வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
ராக்கிங் லேடிஸ் குழுவில் பிரியதர்ஷிணி (புளூட்) ஐசு (கீ போர்டு) ரைனா (டிரம்ஸ்), ஜெயசோனிகா (வீணை), ஸவேதா ஸ்ரீ, பிரர்த்னா (பாடகிகள்) பிரதானமாக உள்ளனர். இதை தாண்டி வெளிநாடுகளில் கச்சேரி என்றால் ஸ்வீடனில் சஜினிஷா (பியானோ), பிரான்சில் சுஜாதா (பாடகர், டான்சர்) என ஒவ்வொரு இசை உபகரணங்களுக்கும் ஏராள பெண் கலைஞர்கள் குழுவில் உள்ளனர். கச்சேரி என வந்தால் நாள், நேரம் தெரிவித்தால் போதும் தவறாமல் ஆஜராகிவிடுவர்.
இதை தவிர ஆதரவற்றோர், ஏழைகளுக்கு உதவி, தெருவோரங்களில் வாழ்வோர், கூலித் தொழிலாளர்களுக்கு பண்டிகை காலங்களில் புத்தாடை உட்பட நலத்திட்டங்களை செய்து வருகிறோம் என்கிறார் ரஞ்சிதா தேவி.
மியூசிக் டூரிசம்
புளூட் கலைஞர் பிரியா: 8 ஆண்டுகளாக ஜப்பானில் இசையமைப்பாளராக இருந்தேன். ஓராண்டுக்கு முன் ராக்கிங் லேடிஸ் குழுவில் இணைந்தேன். ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று கச்சேரி செய்வது நிம்மதியை தருகிறது. பெண் இசைக் கலைஞர்களை ஊக்குவித்து, சாதனையாக்க இக்குழு பாலமாக உள்ளது. எங்கள் குழு உலகம் முழுவதும் இசை கச்சேரிகளை நடத்தும் இலக்கை நோக்கி (வோர்ல்டு மியூசிக் டூரிசம்) சென்றுகொண்டிருக்கிறோம் என்றார்.
- கே. காளீஸ்வரன்