/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
கைவினை பொருட்களின் கின்னஸ் நாயகி - ஒரு லட்சம் பொம்மைகள் செய்து சாதனை
/
கைவினை பொருட்களின் கின்னஸ் நாயகி - ஒரு லட்சம் பொம்மைகள் செய்து சாதனை
கைவினை பொருட்களின் கின்னஸ் நாயகி - ஒரு லட்சம் பொம்மைகள் செய்து சாதனை
கைவினை பொருட்களின் கின்னஸ் நாயகி - ஒரு லட்சம் பொம்மைகள் செய்து சாதனை
PUBLISHED ON : ஜன 14, 2025

கலை, கைவினைப்பொருட்களை உருவாக்கி சத்தமில்லாமல் ஐந்துமுறை கின்னஸ் சாதனை பதிவுக்காக தன்னை அடையாளப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் மதுரையை சேர்ந்த கைவினைக்கலைஞர் சுபாஷினி.
ஏதாவது ஒரு கலையை பற்றிக் கொண்டால் நம் எண்ணங்களுக்கு வேறு வர்ணம் கிடைத்து வாழ்வு சுவையாய் மாறும். கலைகளின் வடிவில் வானில் சிறகடித்து பறக்கலாம். என் எண்ணங்களுக்கு சிறகு முளைத்தது இப்படித்தான்' என்று தன் பாதையை விவரித்தார். அவர் கூறியது:
திருச்சியில் இருந்து திருமணமாகி மதுரை வந்தேன். ஏற்கனவே கற்றுக் கொண்ட கலை என்னை வெறும் குடும்பத்தலைவியாக நினைக்கவிடாமல் தடுத்தது. ஆரி எம்பிராய்டரி, பெயின்டிங், டிராயிங் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் பயிற்சியாளராக உயர்ந்தேன், மற்றவர்களுக்கு கற்றுத்தர ஆரம்பித்தேன்.
மியூரல் ஒர்க், பேப்ரிக் பெயின்டிங், கிளாஸ் பெயின்டிங், ஜூவல்லரி பெஸ்டோ டாப், நேச்சுரல் ஜூவல்லரி, களிமண் பொம்மை, களிமண் நகைகள் என புதிது புதிதாக பயிற்சி அளித்து வருகிறேன். தற்போது தையல் கடைகளில் மீதமாகும் புதிய துணிகளை வாங்கி காதணி, வளையல், கிளிப், பென்டென்ட் ஜூவல்லரி தயாரிக்கிறேன். இதை ஆடைக்கு பொருத்தமாக அணிந்தால் கம்பீரமாக இருக்கும்.
பிஸ்கட் வாங்கிய அட்டை பெட்டியை கூட அழகுப்பொருளாக மாற்றலாம். அவரவர் பார்க்கும் விதத்தில் அது குப்பையா கலையா என முடிவு செய்ய முடியும். குறைந்த கட்டணம் வாங்கிக் கொண்டு மெட்டீரியலோடு பயிற்சியும் தருகிறேன். பயிற்சி பெற்று வீட்டிலிருந்தே பெண்கள் வருமானம் ஈட்டலாம்.
கின்னஸ் சாதனை எப்படி
முதல் கின்னஸ் சாதனைக்காக 2015ல் குரோசா ஒயரில் 'பிளாங்கெட்' தயாரித்தேன். வழிகாட்டுதல் இல்லாததால் பங்கேற்க முடியவில்லை. 2016ல் சரியான வழிகாட்டுதலுடன் கின்னஸ் சாதனையில் பங்கேற்றேன். குரோசா ஒயர்களில் ஸ்கார்ப் தயாரிக்க வேண்டும். குழுவாக சேர்ந்து ஒவ்வொருவரும் நுாறு முதல் எண்ணிக்கைக்கு ஏற்ப ஸ்கார்ப் தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு இடத்துக்கு குழுவாக சென்று நாங்கள் உருவாக்கிய ஸ்கார்ப்பை மொத்தமாக ஒன்று சேர்த்து கொடுப்போம். நிகழ்ச்சிக்கு முதல்நாள் எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து ஓரிடத்தில் வைத்து காட்டுவோம். அதன் மொத்த நீளத்தை அளவிட்டு கின்னஸ் சாதனையை பதிவு செய்தனர். முதல் சாதனைக்கு கிடைத்த உற்சாகம் அடுத்தடுத்து பங்கேற்க துாண்டியது.
2வது கின்னஸில் குழுவாக சேர்ந்து 54 ஆயிரம் குரோசா பொம்மைகள் தயாரித்தோம். 3வது கின்னஸில் கிறிஸ்துமசுக்காக 54 ஆயிரம் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு சாதனையை பதிவு செய்தோம். 4வது கின்னஸ் சாதனையை 'பேப்பர் குல்லிங்' பொம்மைகளாக தயாரித்தோம். அதில் குறைந்தபட்ச உயரம் 5 இஞ்ச். மனிதமுகத்தில் கண், மூக்கு, காது, வாய் அனைத்தும் குறிப்பிட்ட அளவுகளில் தெளிவாக இருக்க வேண்டும்.
5வது கின்னஸ் சாதனையாக 1008 ஹிந்து கடவுள்கள் சிலை உருவாக்க திட்டமிட்டோம். 100 பேர் குழுவாக இணைந்து பணி செய்தோம். 'பேப்பர் குல்லிங், துணி, களிமண், ஒயர் வகை பொம்மை, பார்பி வகைகளில் சிலை உருவாக்கினோம். நான், மகன்கள் மற்றும் 8 பேருடன் சேர்ந்து துணி, ஒயர், களிமண் மற்றும் பார்பி வடிவில் சிலைகளை தயாரித்து கொடுத்தோம். ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் கிடைத்தது.
கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கிறோம். நம்மைச் சுற்றி வாய்ப்புகள் உள்ளன. நாம் தான் தேடி எடுக்க வேண்டும். அப்படித்தான் சாதித்து வருகிறேன் என்றார் சுபாஷினி.
இவரிடம் பேச 98434 56686.
- எம். எம். ஜெயலெட்சுமி