/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
பட்டாசு நகரில் இருந்து ஒரு பான் இந்தியா எழுத்தாளர் - பர பர ஆங்கில நாவல்களுக்கு அனுஜா
/
பட்டாசு நகரில் இருந்து ஒரு பான் இந்தியா எழுத்தாளர் - பர பர ஆங்கில நாவல்களுக்கு அனுஜா
பட்டாசு நகரில் இருந்து ஒரு பான் இந்தியா எழுத்தாளர் - பர பர ஆங்கில நாவல்களுக்கு அனுஜா
பட்டாசு நகரில் இருந்து ஒரு பான் இந்தியா எழுத்தாளர் - பர பர ஆங்கில நாவல்களுக்கு அனுஜா
PUBLISHED ON : ஜன 14, 2025

மும்பை, டில்லி, பெங்களூருவில் இருந்து தான் அதிகமாக ஆங்கில நாவல் எழுத்தாளர்கள் உருவாகிக்கொண்டிருந்தார்கள். அதனை உடைத்தெறிந்து நம்மூர் சிவகாசியில் இருந்து, உலகே உற்றுநோக்கும் வகையில் ஆங்கில நாவல்களை எழுதி சாதித்துக்கொண்டிருக்கிறார் குடும்பத்தலைவியான அனுஜா சந்திரமவுலி.
'பான் இந்தியா' திரைப்படம் என்று சொல்வோம் அல்லவா; அதே போன்று 'பான் இந்தியா' நாவல் என்ற தரத்திற்கு இவரது படைப்புகள் இன்று விற்கப்படுகின்றன. ௧௨ ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய 'அர்ஜூனா' என்ற முதல் நுாலில் இருந்து, அண்மையில் வெளியான 'த ஒய்ப் அன்ட் டான்சிங் கேர்ள்' வரை இந்தியாவில் அதிகம் விற்கும் 'டாப் 5' ஆங்கில நாவல்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளன.
இதுவரை எழுதிய 14 நாவல்களும் வாசகர்களை வித்தியாசமாக சென்றடைய காரணம் அதன் கருவும் எழுத்தாக்கமும் தான். புராணங்கள், இதிகாசங்கள், வரலாற்றை தழுவி அவற்றின் 'ஒரிஜினாலிட்டியை' மாற்றி விடாமல் இவரது பார்வையில் எழுதுகிறார்.
'அர்ஜூனா' நாவலில் மகாபாரத அர்ஜூனனை போர் வீரானாக நாம் அறிவோம். ஆனால் அனுஜாவின் அர்ஜூனன் அன்புள்ள கணவனாக, சகோதரனாக, மகனாக இருப்பார். இந்த நாவல் ஹிந்தி, மராத்தி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெளியான 'மோகினி', 'காமதேவா', 'அபிமன்யூ', 'சக்தி' போன்றவற்றை புராணங்களை தழுவியும், 'பிருதிவிராஜ்', 'முகம்மது பின் துக்ளக்' வரலாற்றை சார்ந்தும் எழுதியுள்ளார். இதில் 'மோகினி' பல்வேறு விருதுகளை பெற்று, 3ம் பாலின மக்களிடம் பெரும் மதிப்பை பெற்றது.
சிலப்பதிகார கதாபாத்திரங்கள்
அண்மையில் வெளியாகி இந்திய அளவில் பெரிதும் கவனிக்கப்பட்ட 'த ஒய்ப் அன்ட் டான்சிங் கேர்ள்' சிலப்பதிகார கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டது. இதில் 'ஒய்ப்' என்பது கண்ணகியையும், 'டான்சிங் கேர்ள்' மாதவியையும் குறிப்பிடுகிறது.
இந்த வித்தியாசமான எழுத்துலக அனுபவங்களை பற்றி அனுஜா கூறியதாவது:
நான் சைக்காலஜியும், ஆங்கில இலக்கியமும் பயின்றவள். ஒவ்வொரு நாவல் எழுதும் போது, நிறைய ஆராய்ச்சி செய்கிறேன். குறிப்பிட்ட இதிகாசங்களையும், புராணங்களையும் பல முறை படித்து கதாபாத்திரங்களை உணர்வுபூர்வமாக அணுகுகிறேன். சைக்காலஜி படித்ததால் அது எனக்கு எளிதாகிறது.
'கங்கா' என்ற நுாலில் கடவுளான தேவியின் மனித பக்கத்தை எழுதியிருந்தேன். 'துக்ளக்' எழுதும் போது கவனமாக வரலாற்று கருத்துக்களை தேடி எழுதினேன்.
'த ஒய்ப் அன்ட் டான்சிங் கேர்ள்' நுாலை எனது உயிரைக்கொடுத்து எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்தை பலமுறை படித்து, அதில் கண்ணகியையும், மாதவியையும் ரொம்பவே ஆராய்ச்சி செய்து புதிய பார்வையில் உணர்வுபூர்வமாய் எழுதியுள்ளேன். மிகவும் சாந்தமான கண்ணகி, கோபமானவராக எப்படி மாறினார்? நடனமங்கை மாதவியின் பக்கத்தில் இருந்து கோவலனை கண்டுபிடித்திருக்கிறேன். மதுரையை எரித்ததில் கிளைமாக்ஸில் ஒரு 'டிவிஸ்ட்' வைத்திருக்கிறேன்.
திருமணமாகி முதல் குழந்தை பிறந்த பிறகு என் முதல் 'நாவல் குழந்தை' பிறந்தது. குழந்தையையும், குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு இரவெல்லாம் கண்விழித்து நுால்கள் படிப்பேன். எல்லோரும் துாங்கிய பிறகு எழுதிக்கொண்டிருப்பேன்.
என் கணவர் தொழிலதிபர் சந்திரமவுலி. 'நீ எப்போதும் பெண்ணிய கருத்துக்களையே எழுதுகிறாயே' என கிண்டல் செய்து கொண்டே, எனது எழுத்திற்கு துணையாக இருக்கிறார். இப்போது குழந்தைகள் வளர்ந்து விட்டதால் எழுதுவதற்கு எனக்கான நேரம் கிடைக்கிறது. கிடைத்த நேரத்தில் பரதநாட்டியம் கற்று அரங்கேற்றம் செய்திருக்கிறேன்.
என் எழுத்திற்கு முதல் விமர்சகர் நானே. என் எழுத்தை நானே மதிப்பிட்டுக்கொள்வேன். என் நாவல்களில் 'நான்' எழுதுகிறேன் என்பதை விட 'என் கதாபாத்திரங்கள்' தான் பேசும்!
இவ்வாறு கூறினார்.
பட்டாசு நகரில் இருந்து பரபரப்பான எழுத்தாளராகியிருக்கும் அனுஜாவின் கையெழுத்துடன், அவரது நுாலை வாங்க வரிசையில் காத்திருக்கிறது பெருநகரங்களின் அறிவுஜீவிக்கூட்டம். எழுத்தில் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அனுஜாவை வாழ்த்துவோம்!
- ஜி. வி. ரமேஷ் குமார்