/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
மூளையை சுறுசுறுப்பாக்கும் 'வள்ளி கும்மி'
/
மூளையை சுறுசுறுப்பாக்கும் 'வள்ளி கும்மி'
PUBLISHED ON : ஜன 14, 2025

கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மியாட்டக் கலை புத்துயிர் பெற்று வருகிறது. இந்த வள்ளி கும்மிக்கு எந்த இசைக் கருவியும் இல்லை. பாடிக் கொண்டே, ஆடவேண்டும். பாடும்போது பன்னாங்கு (தாளக்கட்டு) போடுவது அவசியம்.
பண்டைய காலத்தில் கும்மி ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்துள்ளது. அழிந்து வந்த கும்மி ஆட்டக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக வள்ளி கும்மியாட்டம் கலையை சிலர் பயிற்றுவித்து வருகின்றனர்.
'எந்தவொரு பாரம்பரிய கலைக்கும் கலைஞர்கள் உள்ளனர் என்றால், வள்ளிக் கும்மி ஆட்டத்தில் அந்தந்த கிராம மக்களே கலைஞர்களாக மாறி விடுவர்,' என்கிறார் பொள்ளாச்சி காராள வம்சம் கலைச் சங்கம் வள்ளி கும்மி ஆட்டக் ஆசிரியர் சிவக்குமார். அவர் கூறியது:
எவ்வாறு வள்ளி, முருகனை கரம் பிடித்தார் என்பதை விஞ்ஞானமாகவும், மெய்ஞானமாகவும் சொல்லும் கதை வள்ளிக் கும்மி. மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக ஏற்படுத்தப்பட்ட கிராமிய கலை இது. கும்மிகளில் பல வகை உண்டு. அதில் பிரத்யேகமாக வள்ளிக் கும்மியில் சில அசைவுகள் மாறுபடுகின்றது.பவளக்கொடி, அரிச்சந்திரன், காளிங்கராயன், முளைப்பாரி என பல வகை இருந்தாலும் கூட, கொங்கு பகுதியில் பின்பற்றக் கூடியது வள்ளிக் கும்மி நடனமாகும்.
விளைநிலத்தில் பாடுபடும் மக்களை உற்சாகப்படுத்த வள்ளி கும்மி ஆடினர். இதில் ஒரு அறிவியலும் அடங்கியுள்ளது. என்னவென்றால், உடலில் வலதுபுற உறுப்புகள் செயல்பட இடதுபுற மூளை வேலை செய்யும். இதேபோல, இடதுபுற உறுப்புகள் செயல்பட வலதுபுற மூளை வேலை செய்ய வேண்டும். அவ்வகையில் மனிதனின் மூளை சமன்பாட்டை வள்ளிக் கும்மி வாயிலாக ஏற்படுத்தியுள்ளனர். வலச்சுழி செய்தால் இடப்புறமாக திரும்புவதும், இடச்சுழி செய்தால் வலப்புறமாக திரும்புவதும் வள்ளிக் கும்மியில் உள்ளது.
பாடலும், ஆடலும் கூடிய உள்ளங்கை கொட்டும்போது, மனிதனின் மூளை சுறுசுறுப்படைகிறது. அரசு விழாக்கள், கோயில் திருவிழாக்களில் வள்ளி கும்மி ஆட்டம் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது என்றார்.
- எஸ். சதீஷ்