
* இது
கதிரவனை
வரவேற்க
நட்சத்திரங்களைப்
புள்ளிகளாக்கி
மின்னல்களை
கோடுகளாக்கி
தாவணி நிலாக்கள்
தரையில் கோலமிடும்
தைத் திருநாள்
* வீடுகளும்
பொங்கலுக்கு
கட்டும் புத்தாடை!
சுவர்களின்
ஆடை தானே
சுண்ணாம்பு!
* மண்ணிற்கும்
மனிதர்களுக்கும்
நடக்குமிந்த
மகரந்த சேர்க்கையில்
பானைகளில்
பால் பூக்கும்!
* இது
கால்நடைகளை
கவுரவப்படுத்தும்!
உழுவதற்கு
மட்டுமல்ல
தொழுவதற்கும்
என்று!
* காளைகளுக்கும்
பசுக்களுக்கும்
கழுத்தில்
பிடறி முளைக்கும்!
* நம்மை வளர்ப்பது
பெண்ணில் கருப்பை
மண்ணில் கலப்பை
பொங்கல் உணர்த்தும்
இந்த நினைப்பை!
* நாம் கூட
தசைகளால் ஆன
தாவரங்கள் தான்!
* நாமும்
விதைக்கப்படுகிறோம்!
விதைகளை
மூடத்தான்
நம் அன்னையர்
மசக்கையாய்
இருக்கையில்
மண்ணை
உண்கிறார்கள்!
* தாயின் வயிற்றில்
தண்ணீருக்குள் தான்
இருந்தோம்!
* அங்கே
வேண்டியதை
உண்டோம்
வேர்கள் வழி!
தோற்றத்தில்
வேர்கள் தானே
தொப்புள் கொடியும்!
* தடவிப் பாருங்கள்
நம்மிலும்
தண்டுவடமுண்டு!
* கனிகளுக்கும் நமக்கும்
காலம் காலமாகத் தொடர்பு!
* ஆப்பிளைக்
கடித்ததிலிருந்து
ஆரம்பமானது
வாழ்க்கை!
* இயற்கைக்கும்
நமக்கும்
இறைவனே
உழவர்கள்!
* கண்கண்ட தெய்வம்
போல
அவர்கள்
மண்கண்ட தெய்வம்!
* தன்னைப் பிழிந்து
மண்ணை
நனைக்கிறவர்கள்
* வயிற்றில் சுமக்கும்
அன்னையைப் போல
நம்மை வயலில்
சுமப்பவர்கள்!
* கலப்பை கொண்டு
இரைப்பை நிரப்புவர்கள்!
* இயற்கையையும்
உழவர்களையும்
இன்றே
வணங்குவோம்!
கையைக்
குவித்தல்ல
வாழ்க்கையைக்
குவித்து!
- கவிஞர் நெல்லை ஜெயந்தா