/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
பெண்களே...ஆன்மிகத்தை அறிந்து கொள்ளுங்கள் - லட்சம் மேடைகள் கண்ட சுமதி ஸ்ரீ
/
பெண்களே...ஆன்மிகத்தை அறிந்து கொள்ளுங்கள் - லட்சம் மேடைகள் கண்ட சுமதி ஸ்ரீ
பெண்களே...ஆன்மிகத்தை அறிந்து கொள்ளுங்கள் - லட்சம் மேடைகள் கண்ட சுமதி ஸ்ரீ
பெண்களே...ஆன்மிகத்தை அறிந்து கொள்ளுங்கள் - லட்சம் மேடைகள் கண்ட சுமதி ஸ்ரீ
PUBLISHED ON : ஜன 14, 2025

வீட்டிற்குள் ஆண்களுக்கு முன் உட்காரக் கூடாது; பெண்கள் சத்தம் போட்டு பேசக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்தவர். எட்டு வயதில் தன் மேடை பேச்சை துவங்கி, தற்போது பெண் ஆன்மிக சொற்பொழிவாளர்களின் தமிழக 'ஐகான்'ஆக கண்டம் விட்டு கண்டம் சென்று தன் பக்தி சொற்பொழிவுகளால் லட்சக்கணக்கான ஆன்மிக இதயங்களை ஈர்த்து வருகிறார், திருச்சி சுமதிஸ்ரீ. தினமலர் பொங்கல் மலருக்காக நம்மிடம் மனம் திறந்த தருணம்...
* எப்போது துவங்கியது உங்களது பேச்சு பயணம்...
எட்டு வயதில் பேச்சு திறமை எனக்குள் எட்டிப்பார்த்தது. திருச்சி பள்ளியில் வகுப்பறையில் படித்துகொண்டிருந்தபோது அருள்சகோதரி எத்திலின் என்பவர் 'என்ன படித்துக்கொண்டிருக்கிறாய்' என கேட்டார். அப்போது வ.உ.சி., தொடர்பான பாடத்தில் பாரதியின் 'அச்சமில்லை... அச்சமில்லை...' என்ற பாடலை படித்துக்கொண்டிருந்தேன். அதை அவரிடம் உரக்க பாடிக்காட்டினேன். என் கணீர் குரல் அவருக்கு பிடித்துப்போய்விட்டது. பள்ளி இறைவணக்க நிகழ்வில் என்னை பாட அனுமதித்து, அனைவரின் கைதட்டலையும் பெற்றேன். அது என் பேச்சாளர் கனவுக்கான துவக்க புள்ளியாக இருந்திருக்கலாம்.
* முழுநேர பேச்சாளரான பின்னணி...
எங்கள் வீட்டில் பெண்கள் சத்தம் போட்டு பேசக்கூடாது என அப்பா கண்டிப்பார். பேச்சு போட்டிகளில் பங்கேற்ற போது படிப்பில் கவனம் குறைந்தது. அப்போது 'பேச்சுதான் சோறு போட போகுதா. ஒழுங்கா படிக்க பாரு' என கண்டித்தார்.
ஆனால் இப்போது இந்த நிமிஷம் வரை பேச்சு தான் எனக்கு சோறு போடுகிறது. அம்மா, பாட்டி சத்தம் போட்டு பேசாத விஷயத்தை மேடையில் நான் சத்தமாக பேசியதும், அதற்கு ஆண்களிடமிருந்தே கை தட்டல் கிடைத்ததும் எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவே என்னை முழு நேரபேச்சாளராக மாற்றியது. பேச்சால் தான் வளர்கிறேன்.
* இதுவரை கண்ட மேடைகள் ...
கல்லுாரி காலத்தில் இருந்தே பட்டி மன்றங்களில் பேசத் துவங்கி விட்டேன். ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் என கடல் கடந்தும், கண்டங்கள் தாண்டியும் என் ஆன்மிக பேச்சுப் பயணம் சென்று கொண்டிருக்கிறது. உகாண்டா, ஜாம்பியாவில் பங்கேற்ற முதல் தமிழ் பெண் பேச்சாளர் என்ற பெருமை எனக்கு கிடைத்தது. இலங்கையில் 21 நாட்கள் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தினேன். அந்த நிகழ்ச்சிக்காக பார்வையாளர்களுக்கு 21 நாட்களும் அரசு சார்பில் சிறப்பு பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டது. கடவுள் அருளால் இதுவரை நான் ஏறியது லட்சம் மேடைகளை தொட்டிருக்கும்.
* ஆன்மிகம் மூலம் மக்களுக்கு சொல்லும் விஷயம்...
'கடவுள் இல்லை' என சொல்பவர்கள் புரட்சியாளர்களாக பார்க்கப்படுகின்றனர். சுவாமி இல்லை என்பது பேஷனாக மாறிவிட்டது. நான் ஆன்மிகப் பேச்சாளராக மாறிய பின், என் நட்பு வட்டமே என்னை கிண்டல் செய்தது. இன்று அனைத்து இடங்களிலும் வன்மம் விதைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கான கேம்ஸ்களில் கூட, 'நீ ஜெயிக்கனும்னா பக்கத்தில் இருக்கிறவனை அடி...' என ஆரம்பிக்கிறது.
விளையாட்டு மூலம் குழந்தைகள் உள்ளத்தில் வன்முறை விதைக்கப்படுகிறது. குழந்தைக்கு அன்பு, கருணையை சொல்லிக்கொடுக்கும் சூழ்நிலை இப்போது இல்லை. இதற்கெல்லாம் தீர்வு ஆன்மிகம். அது மக்களுக்கு நம்பிக்கை, கருணை, மனித நேயத்தை கற்றுக்கொடுக்கிறது. அதை தான் உலகம் முழுவதும் என் பேச்சு மூலம் கொண்டு சேர்த்துக்கொண்டிருக்கிறேன். என் ஆன்மிக சொற்பொழிவை கேட்டு மனைவியை அடிக்கிற பழக்கம் உள்ள பல கணவர்கள் திருந்தியுள்ளனர் என்பது எனக்கு பெருமையே.
* ஆன்மிக அறிவியலை முன்னெடுக்குறீர்களே...
இன்றைய இளையதலைமுறையினருக்கு ஆன்மிக அறிவியல் குறித்து நல்ல புரிதல் ஏற்பட வேண்டும். 'காட்ஸில்லா' என்ற படம் பார்த்தபோது அதில் வரும் காட்ஸில்லா என்ற கற்பனை உருவம் பிரமாண்டமாக காட்டப்பட்டது. அது காலை கீழே வைத்தால் அந்த இடத்தில் பூமி உள்ளே போகிறது. அது எழுந்தால் அதன் உயரம் வானை தொடுகிறது, கண்ணில் இருந்து நெருப்பு வருகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது நம் கம்பராமாயணத்தில் வரும் 'தாடகை' கதாபாத்திரம் தான் நினைவுக்கு வந்தது. ஹாலிவுட் படங்களில் இதுபோன்ற கற்பனை, தொழில்நுட்ப விஷயங்கள் இன்று தான் சொல்லப்படுகிறது. ஆனால் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர் இதுபோன்ற விஷயங்களை எழுதி வைத்துள்ளனர்.
* ஆன்மிகத்தின் இன்றைய தேடுதல்...
ஆன்மிகம் மட்டுமே மனிதர்களை நெறிப்படுத்துகிறது. பக்தி இலக்கியங்கள் பக்குவப்படுத்துகின்றன. ராமாயணம், மகாபாரத்தை படித்தவர்கள் என்ன கஷ்டங்கள் வந்தாலும் அதை தாங்கும் மனஉறுதியை பெறுவர். அவ்வளவு விஷயங்கள் அதில் உள்ளன. ஒவ்வொரு ஆன்மிக பேச்சும் பல வித தகவல்களை சொல்கின்றன. ஆன்மிகமே இன்றைக்கு அவசிய தேவை. வீடு தோறும் ஆன்மிகம் கமழ வேண்டும். அப்போது தான் நாடு தோறும் அமைதி, அன்பு நிலவும்.
* மறக்க முடியாத நினைவுகள்...
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், சபரிமலை மகர ஜோதி தரிசனம், திருவண்ணாமலை தீபம் ஏற்றுதல், திருச்செந்துார் சூரசம்ஹாரம் போன்ற முக்கிய ஆன்மிக நிகழ்வுகளில் வர்ணனையாளராக இருந்தது என் வாழ்வில் கிடைத்திடாத பொக்கிஷ நிமிடங்கள்.
* இன்றைய பெண்களுக்கான உங்கள் 'அட்வைஸ்'...
இன்றைய சூழலில் பெண்கள் அவதுாறுகள், கேலி கிண்டல்களை பொருட்படுத்தாமல் உறுதியான மனநிலையுடன் தொடர்ந்து பயணிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதிகம் படிக்க வேண்டும். குறிப்பாக ஆன்மிகத்தில் அவ்வளவு தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு பக்தி இலக்கியங்களும் ஒரு புதிய விஷயங்களை தரும்.
* சந்தித்த மனிதர்களில் நினைவில் நின்றவர்...
இசையமைப்பாளர் இளையராஜா. வாழ்வில் ஒருமுறையாவாது சந்தித்து விடமாட்டோமா என பலமுறை ஏங்கியது உண்டு. அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நான் வர்ணனையாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது என்னிடம் அவர் பேசும்போது என் ஆன்மிக சொற்பொழிவுகளை அவர் பார்த்து என்னை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்ததை குறிப்பிட்டார்.
* பெண் பேச்சாளர்கள் அதிகம் இல்லையே...
பெண் பேச்சாளர்களுக்கு உடல் ரீதியான பிரச்னைகள் உள்ளது. அதுவும் ஆன்மிக சொற்பொழிவாளராக வருவது மிக குறைவு. திறமையான பெண் பேச்சாளர்கள் அதிகம் உருவாகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஒரு எல்லையை தாண்டி 'மேடை வெளிச்சம்' கிடைப்பது சவாலாக உள்ளது. அந்த நிலை மாற வேண்டும்.
Insta: Sumathi.Sri.1
- கே. காளீஸ்வரன்