PUBLISHED ON : அக் 30, 2024

'பல் போனால் சொல் போச்சு' என்பார்கள், சொல் போனால் வாழ்க்கையே மாறிவிடும். வார்த்தை என்பது வெறும் சத்தம் அல்ல, ஆற்றல். 'பிழைபடப் பேசேல்' என்ற அவ்வையின் வரிகளின் படி வார்த்தையில் பிழை, வாழ்வையே பிழையாக மாற்றும். பச்சோந்தியின் நாக்கு அதன் உடலின் நீளத்தை விட இரு மடங்கு பெரியது. நீல திமிங்கலத்தின் நாக்கு ஒரு யானையின் எடைக்கு இணையானது. யோசித்துப் பாருங்கள்... மனித நாக்கு உடலில் எத்தனை சிறியது. பலரும் பேச்சு வழக்கில் 'நாக்கில் நரம்பில்லாமல் பேசாதே' என்பர். அளவில் சிறிதானாலும் நாக்கின் விளைவு அளப்பரியது. அதனால் வள்ளுவர் 'நா காக்க' என்கிறார். சொல் ஆற்றும், மாற்றும், ஏற்றும். சொல் சக்தி, யுத்தி, முக்தி தரும்.
உடல்மொழி
நம்முடைய கருத்துப் பரிமாற்றங்களில் 55 சதவீதம் உடல் மொழியாலும், 38 சதவீதம் குரல் தொனியாலும், வெறும் 7 சதவீதம் மட்டுமே வார்த்தைகளாலும் வெளிப்படுத்தப்படுகின்றன என்று கண்டறிந்தார் உளவியல் பேராசிரியர் ஆல்பர்ட் மெஹராபியன். மொழி உதடுகளில் இருந்து வரும் வார்த்தைகளில் மட்டும் அல்ல; உடல் அசைவுகளும் ஆயிரம் மொழி பேசும், கண்களில் ஆரம்பித்து கை அசைவுகள், நிற்கும் பாங்கு என உடலின் ஒவ்வொரு அசைவிற்கும் வார்த்தைகளோடு நெருங்கிய தொடர்பு உள்ளது.
வாய்ப்பேச்சு செயலற்றுப் போகும் போது கண்கள் பேசும். வாய்ப்பேச்சின் மவுனத்தில் மனங்கள் உரையாடும். வார்த்தைகளின் அலைவரிசையை வைத்து நாம் எந்த உணர்வில் இருக்கிறோம் என கண்டறியலாம்.
மனிதனின் உடலில் வெளிவரும் அனைத்தும் கழிவுகளே. உதிர்ந்த முடி, உமிழ்ந்த கோழை, குடலின் கழிவுகள், தோலிலிருந்து வெளிவரும் வியர்வை அனைத்துமே கழிவுகளாகவே வெளிவருகின்றன. ஆக்சிஜனும் மனிதனுக்குள்ளே சென்றால் கார்பன் டை ஆக்சைடாக வெளி வருகிறது. மனிதன் நினைத்தால் தன்னில் இருந்து வெளிவரும் சொல்லை மட்டுமே “வாழ்த்தாகவும் மாற்றலாம், வசையாகவும் மாற்றலாம்”. தன்னுள் நுழையும் ஒன்றை தன் விருப்பப்படி மாற்ற முடியும் என்றால் அது 'சொல்' மட்டுமே ஆகும்.
வார்த்தை அழகானால்...
ஒரு மனிதன் பேசுவதற்குப் பழக மூன்று முதல் ஐந்து வயது ஆகிறது. ஆனால் எப்படிப் பேச வேண்டும், எங்கு பேச வேண்டும், எந்நேரத்தில் பேச வேண்டும் என்று கற்பதற்கு ஆயுட்காலம் முழுதும் தேவைப்படுகிறது. ஒரு மனிதனின் வார்த்தை அழகானால் வாழ்க்கை அழகாகும். வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டிய மூன்று தருணங்கள் உண்டு. முதலாவது நாம் நமக்குள் பேசும் சுய பேச்சு, 2வது நம் உறவுகளுக்கு இடையில் பேசும் பேச்சு, இறுதியாக நம் தொழில் முறை பேச்சு. இந்த மூன்று தருணங்களில் வார்த்தைகளில் நிதானம் இருந்தால் நிச்சயம் நல்ல நிலையை அடையலாம்.
'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு'
தீப்புண்ணை விட, நா உண்டாக்கும் புண் பெரிது என்று திருவள்ளுவர் காட்டிய உவமையை விட வேறு உவமை வேண்டுமா சொல்லின் ஆற்றலைச் சொல்ல? மனநிலைக்குத் தகுந்தாற் போல் வார்த்தைகள் பேசலாம். ஆனால் மனநிலை மாறும்; பேசிய வார்த்தை மாறாது.
பேசாத வார்த்தைகள்
பேசாத வார்த்தைகளுக்கு நீ எஜமான், பேசிய வார்த்தைகளுக்கு நீ அடிமை. மற்றவர்களை அடக்கி ஆள்பவன் சர்வாதிகாரியாக இருக்கலாம். ஆனால் எவன் ஒருவன் தன் நாவை அடக்கி ஆள்கிறானோ அவனே சரியான அதிகாரி. அவனின் காலடியில் உலகம் இருக்கும்.
நல்ல வார்த்தைகளைப் பேசுபவர்கள் எல்லாம் ஒழுக்கமுடையவர்கள் என்று கூற இயலாது. ஆனால் நல்லொழுக்கம் உடையவர்கள் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுவர். ஏனெனில் ஒரு மனிதனின் ஒழுக்கத்தின் முதல் காரணியாகக் கூறப்படுவது அவனது வார்த்தைகளே.
டாக்டர் மசாடு எமோட்டோ என்ற ஆய்வாளர் 1990களில் நீரின் மீது வார்த்தைகளின் தாக்கத்தை வெளிப்படுத்தி வார்த்தைகள் ஓர் அதிர்வைக் கொண்டுள்ளன என தெளிவுபடுத்தினார்.
அவர் பல குடுவைகளில் தண்ணீர் நிரப்பி, சில குடுவையில் நேர்மறை வார்த்தைகளையும், மற்ற குடுவையில் எதிர்மறை வாசகங்களையும் எழுதி அதில் நீர் ஊற்றி பின் அதனை உறைய வைத்தார். 'முட்டாள்' என்ற எதிர்மறையான வார்த்தையும், 'அன்பு' என்ற நேர்மறையான வார்த்தையும் அதில் பயன்படுத்தப்பட்டது. நேர்மறையான வார்த்தைகள் எழுதப்பட்ட குடுவையில் தண்ணீரில் அழகான பனிப்படிகங்கள் உருவாயின. எதிர்மறை வார்த்தைகள் எழுதப்பட்ட குடுவையில் வசீகரமற்ற படிகங்கள் உருவாகியிருந்தன. இதன் மூலம் நம் வார்த்தைகள் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பது உறுதியாகிறது.
பெண்ணின் மனது
பெண்களின் மனதைப் பிரதிபலிக்கும் மிக முக்கியமான குறள் இது.
'வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்காணார் இல்'
தம் காதலரிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் வாழும் மனைவியைப் போல் கொடியவர் உலகில் யாரும் இல்லை. திருவள்ளுவர் காலம் முதல் இன்று வரை மனைவியை மகிழ்விப்பது கணவனின் பாராட்டு மட்டுமே என்பது தெளிவாகிறது. பிரியமானவர்கள் சொல்லும் சிறு சொல்லும் பன்மடங்கு பலம் தரும்.
கணவன் மனைவி இடையே பயன்படுத்தப்படும் எதிர்மறை வாக்கியங்கள் புற்றுநோய் செல்லாகும், இவற்றை ஆரம்பத்தில் சரி செய்யா விட்டால் பல்கிப் பெருகி உறவையே முறிக்கும். கணவன் மனைவி இடையேயான வாக்குவாதம் அவர்கள் இருவரை மட்டும் பாதிக்கும். ஆனால் அப்பா, அம்மாவிற்கு இடையேயான வாக்குவாதம் ஒரு தலைமுறையையே பாதிக்கும்.
தொழிலில் மேன்மை பெற...
ஒரு மனிதன் பேச்சுத் திறமையை வளர்ப்பதன் மூலம் தன் வருமானத்தை அதிகரிக்கலாம் என்கிறார் லெஸ் ஜிப்ஸின். உரையாடலில் சுவாரசியத்தை வளர்க்க பேச்சில் 'நீங்கள்' என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தி அவர்களைப் பற்றிய நேர்மறை செய்திகளை பேச வேண்டும் என்கிறார். எந்த தொழிலிலும் மேன்மை பெற நாணயம், நாநயம் இரண்டுமே இன்றியமையாதது.
ஒரு குறையை கூறும் முன் அதைப் பற்றிய நிறையை சொல்லி, பின் குறையைக் கூறி, முடிக்கும் போதும் பாராட்டுதலோடு முடிக்க வேண்டும். ஒருவரை சரியான நேரத்தில் சரியான சொற்களால் நுணுக்கமாக உணர்ந்து பாராட்டும்போது அது அவருக்கு பெருமகிழ்வைத் தரும். ஒருவரை ஐந்து நிமிடம் பேச விட்டால், அவரின் சொற்களை வைத்தே அவரின் குணம் என்ன என கணிக்கலாம் என்கிறார் டாக்டர் பேட்ச். மனிதர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு அவர்கள் மன நிலை அறிந்து மலர் மருத்துவ முறையில் மருந்துகளை இவர் பரிந்துரைக்கிறார்.
மவுனமே சிறந்த பதில்
நம் பேச்சிற்கு மரியாதை எங்கு இல்லையோ அங்கு மவுனமே பதில். தனக்குச் சமம் இல்லாதவரின் கூட்டத்தில் பேசும் பேச்சானது சாக்கடையில் சிந்திய அமிர்தத்திற்கு ஒப்பாகும் (குறள் 720) என்கிறார் திருவள்ளுவர்.
ஒரு தந்தை இறக்கும் தருவாயில் மகனிடம் பழமையான கைக்கடிகாரத்தை விற்று வருமாறு கொடுத்தார். கடிகாரத்தை பார்த்து இதற்கு 500 ரூபாய் தேறும் என்றார் காயிலான் கடைக்காரர். எலக்ட்ரானிக் கடையில் ஆயிரம் ரூபாய் தேறும் என்றனர். பின்னர் புராதன பொருட்களை பொக்கிஷமாய் வைத்திருக்கும் நிறுவனத்தில் கடிகாரத்தை காட்டிய போது 15,000 ரூபாய் தருவதாகக் கூறினர்.
இந்த செய்தியை தந்தையிடம் கூறிய போது, 'மகனே இதுவே நான் சொல்லும் செய்தி. நீ இருக்கும் இடத்தில் இருந்தால் தான் உனக்கு மரியாதை' என்றார். இது வார்த்தைக்கும் பொருந்தும்.
மனிதர் வகை
சிந்திக்கும் திறனை வைத்து மனிதர்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1.பேசுவதற்கு முன் யோசிப்பவர்கள்.
2.பேசும் போது யோசிப்பவர்கள்.
3.பேசிய பின் யோசிப்பவர்கள்.
4.பேசுவார்களே தவிர யோசிக்க மாட்டார்கள்.
இதில் நாம் எந்த வகையை சார்ந்தவர் என அறிந்து, நம்மை திருத்திக்கொண்டால் நாம் 'நாநலம்' பெற்றவர்களாவோம்.
ஒரு விஷயத்தை 'பிரச்னை'யாக குறிப்பிட்டால் அது எதிர்மறை விளைவுகளை உடலில் துாண்டி நம் ஊக்கத்தைக் குறைக்கிறது. அதே விஷயத்தை 'சவால்' என்று சொல்லிப் பார்க்கும்போது அதை எதிர்கொள்வதற்கான நேர்மறை சக்தி கிடைக்கும். உண்பதில் கட்டுப்பாடு உடலமைப்பிலும், உரைப்பதில் கட்டுப்பாடு உயர்விலும் தெரியும்.
- முனைவர் லாவண்ய ஷோபனா திருநாவுக்கரசு
எழுத்தாளர், சென்னை
shobana.thiruna@gmail.com