PUBLISHED ON : அக் 30, 2024

பல்லாண்டுகளுக்கு முன்பு கேரளாவின் திருவிதாங்கூரில் உருவான நடனம் கதகளி.
'கத' என்பது கதையையும், 'களி' என்பது (விளையாட்டு) நடனத்தையும் குறிக்கும். இது நடனம், நாடகத்தின் அழகிய கலவை. இதில் உரையாடல்கள் இல்லை. கதையை பின்னணியில் பாடுவார்கள். கலைஞர்களின் செவ்வரியோடும் கண்கள், நுண்ணிய முகபாவனை, சைகை மூலமே கதையை விவரிப்பர். கேரளாவின் கலாசார நடனமான கதகளியை பார்ப்பதும் பங்கேற்பதும் அம்மாநில மக்களின் பெருமையான விஷயம்.
ராமாயணம், மகாபாரதத்தில் வரும் சில பகுதிகளை எடுத்து தேர்வு செய்வர். இதுதான் கதகளியின் கருவாக உள்ளது; பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்துக் கொள்கின்றனர். பின்னணியில் ஒலிக்கும் செண்டை மேளமும், ஆழ்மனதை தொடும் பின்னணிப்பாட்டும் கதகளிக்கு பக்கபலம்.
விரிவான வித்தியாசமான உடை, அலங்காரங்கள், மணிக்கணக்கில் வர்ணம் தீட்டப்பட்ட முகங்களுடன் மேடைக்கு வந்தனர் என்றால் முகத்தின் வர்ணக்கலவையை வைத்தே அந்த பாத்திரம் நாயகனா, வில்லனா என பார்வையாளர் முடிவு செய்துவிடுவர்.
தமிழகத்தில் சென்னை திருவான்மியூர் கலாஷேத்திரா கவின்கலைக் கல்லுாரியில் கேரள கதகளி குழுவினர் மூலம் ஐந்து நாள் திருவிழாவாக நடத்துகின்றனர். அனைவருக்கும் அனுமதி உண்டு.
இந்தியக் கலையை, இசையைப் போற்றி வளர்க்க 1936ல் ருக்மணிதேவி அருண்டேலினால் கலாஷேத்திரா துவக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்து இங்கு வந்து தங்கி பரதக்கலை பயின்று வருகின்றனர்.பரதநாட்டியம், கதகளி, வாய்ப்பாட்டு, வாத்திய இசை ஆகிய கவின் கலைகளில் நான்காண்டு பட்டயச் சான்றிதழ் படிப்பு கற்பிக்கப்படுகிறது.
இங்கு மாணவியர் கதகளியை நுட்பமாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த வருடம் லவகுசா, ஜராசந்தன் ஆகிய தலைப்புகளில் கதகளி திருவிழா நடைபெற்றது.
மிக அற்புதமான, வித்தியாசமான அனுபவத்தைத் தந்த கதகளியை நீங்களும் அனுபவித்து பார்த்து ரசிக்க வேண்டுமா? அடுத்த வருடம் செப்டம்பர் வரை காத்திருங்கள்.