/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
'எங்கெங்கு காணினும் நாகமடா': நாக சிலைகளால் நிரம்பி வழியும் கோயில்
/
'எங்கெங்கு காணினும் நாகமடா': நாக சிலைகளால் நிரம்பி வழியும் கோயில்
'எங்கெங்கு காணினும் நாகமடா': நாக சிலைகளால் நிரம்பி வழியும் கோயில்
'எங்கெங்கு காணினும் நாகமடா': நாக சிலைகளால் நிரம்பி வழியும் கோயில்
PUBLISHED ON : அக் 30, 2024

ஹிந்து மத நம்பிக்கையில் நாகப்பாம்புக்கு தனிஇடம் உண்டு. நவகிரகங்களில் ஒன்றான ராகுவும், கேதுவும் பாம்புகள்தான். 'ராகு போல கொடுப்பான் இல்லை; கேது போல கெடுப்பான் இல்லை' என்பார்கள்.
திருமணம், குழந்தைப் பேறு, சொத்து வாங்க தடை என நாகங்களால் தோஷங்கள் இருக்கும். அதனை நிவர்த்தி செய்தால் தடைநீங்கி வெற்றி கிடைக்கும்.
பாம்பு என்றாலே நம் நினைவுக்கு வருவது நல்ல பாம்பு எனும் நாகம்தான். இதற்கென உள்ள தலம் புதுக்கோட்டை பேரையூர். புதுக்கோட்டை- பொன்னமராவதி ரோட்டில் 14வது கி.மீ.,ல் பிரகதாம்பாள் சமேத நாகனாத சுவாமி கோயில் உள்ளது. சிவனை ஐந்து தலை நாகம் வழிபட்ட தலம் இது.
தந்தையின் காலை சிதைத்த சண்டிகேஸ்வரர், தீவினை நீங்க பேரையூர் வந்து தவம் செய்தார். பிரம்மதேவன் நீராட பல புண்ணிய தீர்த்தங்களை வருவித்து, இங்குள்ள சிவகங்கை குளத்தில் சேர்த்து தீர்த்தமாடி, சிவனை வணங்கினார். இங்கு மூலவர் பிரதிஷ்டை செய்யப்படாமல் சுயம்புவாக உள்ளார். தல விருட்சம் பின்னை மரம்.
இந்த கோயிலில் எங்கு பார்த்தாலும் சிறிய வெள்ளி நாகம் முதல் பெரிய கற்களால் ஆன நாகர்சிலைகள் என எங்கு நோக்கினும் 'நாகர்'மயம்தான். பல ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னன் சுவேத கேதுவால் உருவாக்கப்பட்டது இக்கோயில். நாக பிரதிஷ்டை செய்வோருக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பதால் இங்கு 'நாகர்'கள் குவிந்துள்ளனர். இது இப்படி இருக்க, கோயிலிலுள்ள தென்னை மரமும் பாம்பு போல வளைந்து நிற்கிறது.
ராகுவையும் (தலை), கேதுவையும்(வால்) இங்குள்ள விநாயகர் பூணுாலாக அணிந்திருப்பதால் தோஷம் நிவர்த்தியாகும்.
இங்கு நவக்கிரக சன்னதியில் சூரியனை வணங்கும் விதத்தில் எட்டு கிரகங்கள் உள்ளன. 'ஓம்' எனும் பிரணவ மந்திரம் கோயில் வளாகத்தில் சுனை வடிவில் உள்ளது.
குருக்கள் கண்ணன் கூறுகையில், ''இது புண்ணிய புஷ்கரணி. மலை மீதுதான் சுனை இருக்கும். இங்கு மலை மண்ணுக்குள் அமிழ்ந்ததால் சுனை தரையில் உள்ளது. இதில் பங்குனி மாதத்தில் ஒருநாள் 'பேரேஸ்வரம்' எனும் மிருதங்க ஒலி கேட்கும். சுனைக்குள் உள்ள திரிசூலம் வரை நீர்மட்டம் குறையும் நாளில் இது கேட்கும். அதனால் பேரையூர் என பெயர் வந்தது'' என்றார்.இக்கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு மத்தியில் முருகன் 'சோமாஸ்கந்தராக' அருள்புரிகிறார். முருகன் அருகிலேயே பிரம்மனும் உள்ளார். பிரம்மனின் தலையெழுத்தை மாற்றும் சக்தி முருகனிடம் உள்ளது. அவரை வணங்கினால் தலையெழுத்தை மாற்றுவார்.
இக்கோயிலில் தினமும் ஆறுகால பூஜை நடக்கிறது. சித்திரை விஷூ நாள், ஆடிப்பூரம், பங்குனி தேர்த் திருவிழா நடைபெறும். விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
தொடர்புக்கு: 98424 54324