/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வேலையும் வருமானமும் பெண்களுக்கு மிகவும் அவசியம்!
/
வேலையும் வருமானமும் பெண்களுக்கு மிகவும் அவசியம்!
PUBLISHED ON : செப் 03, 2025 12:00 AM

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஏட்டு ரேவதி:
இதே மாவட்டத்தின் சாயர்புரம் அருகில் உள்ள புளியநகர் தான் என் சொந்த ஊர். அப்பா, பெட்டி கடை நடத்தி வந்தார்; அம்மா இல்லத்தரசி. பெற்றோருக்கு நாங்கள் ஐந்து குழந்தைகள்.
நா ன், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, வார இறுதி நாட்களில் விவசாய வேலைக்கு செல்வேன்; மாணவ - மாணவியருக்கு டியூஷன் எடுப்பேன்.
இதில் கிடைக்கும் வருமானத்தில், என் செலவுகளை நானே பார்த்துக் கொண்டேன். நான் பிளஸ் 2 படித் தபோது, குடும்பத்துடன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றோம்.
அங்கு ஒரு பெண் காவலர், கூச்சல் போட்டுக் கொண்டிருந்த ஆண்கள் வரிசையை ஒழுங்கு படுத்தும் வேலையை துணிச்சலாக செய்து கொண்டிருந்தார்.
அந்த ஆளுமை எனக்கு வியப்பாக இருந்தது. அதனால், 'நாமும் போலீஸ் வேலைக்கு செல்ல வேண்டும்' என்று முடிவெடுத்து, என் புத்தகங்கள் மற்றும் நோட்டுகளில், 'போலீஸ் ரேவதி' என, எழுதி வைத்தேன்.
பி.ஏ., வரலாறு படித்தேன். 2005ல் நடந்த இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வில் வெற்றி பெற்றேன். அடுத்ததாக உடல் தகுதி தேர்வு.
'ஓட்டப்பந்தயத்தில் குறுகிய நேரத்தில் ஓடி வந்தால் தான் வேலை கிடைக்கும்' என, ஒரு பெண் காவலர் கூறினார். அதனால், பகலில் எங்கள் ஊர் குளத்தை சுற்றி ஓடுவேன். இரவு, 9:00 மணிக்கு மேல் எங்கள் ஊருக்கு பேருந்து வராது என்பதால், தார் சாலையில் ஓடி பயிற்சி எடுத்தேன்.
ஒரு வழியாக அந்தாண்டு உடல்திறன் தேர்விலும் வெற்றி பெற்று, பயிற்சி முடிந்ததும், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் சிறப்பு காவல் படையில் பணி கிடைத்தது.
முதல் மாத சம்பளம், 4,500 ரூபாய். வீட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள் தாண்டி, மிச்சம் இருந்த பணத்தை சேமிக்க ஆரம்பித்தேன்.
பணியில் சேர்ந்து, 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. வருமானமும் உயர்ந்து இருக்கிறது. முதல் சம்பளம் வாங்கிய காலத்தில் இருந்தே சேமிக்கவும் ஆரம்பித்து விட்டேன். கணவர் மின் துறையில் மின் கணக்கீட்டாளராக பணிபுரிகிறார்.
என் இரு மகள்களிடமும், 'படிக்கணும், வேலைக்கு போகணும்; எந்த சூழ்நிலையிலும் நேர்மையை விட்டுக் கொடுக்கக் கூடாது' என்று சொல்லி வளர்க்கிறேன்.
பெ ண்கள் எந்த வயதிலும், எவரையும் சாராத ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் எனில், வேலையும், வருமானமும் அவர்களுக்கு மிக மிக அவசியம். அது அவர்களை மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தையும் சேர்த்தே முன்னேற்றும்.