/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நம் வெற்றியால் கஷ்டம் எல்லாம் பஞ்சாக பறந்துடும்!
/
நம் வெற்றியால் கஷ்டம் எல்லாம் பஞ்சாக பறந்துடும்!
PUBLISHED ON : செப் 04, 2025 12:00 AM

'பியூட்டி பார்லர்' தொழிலில் கலக்கும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி:
சிறு வயதில் இருந்தே, எனக்கு அழகு கலையில் ஆர்வம் அதிகம். 10ம் வகுப்பு முடித்த பின், ஊரில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தேன். 2008ல் எனக்கு திருமணமானது.
எங்கள் ஊரில் ஏதாவது விசேஷம் எனில், உறவினர்கள் என்னை தான் வாடகைக்கு கவரிங் நகைகள் எடுத்து வரும்படி கேட்பர். அப்போது ஆர்வமும், ஐடியாவும் வர, 'நான் அழகுக்கலை பயிற்சிக்கு படிக்கிறேன்' என்று வீட்டில் கேட்டேன். கணவர், 'அதெல்லாம் படித்தால் உன்னை விவாகரத்து செய்து விடுவேன்' என்று கூறினார்.
என் மகளை பள்ளியில் விட செல்லும்போது, பக்கத்தில் எங்கள் உறவினர் வைத்திருந்த பார்லருக்கு சென்று, 'நான் உங்களிடம் அழகுக்கலை பயிற்சிகளை கற்றுக் கொண்டு, பதிலுக்கு சம்பளம் வாங்காமல் இங்கேயே வேலை பார்க்கிறேன்' என்று கூறினேன்.
அப்படி மூன்று ஆண்டுகள் சம்பளமில்லாமல் வேலை பார்த்தேன். அது கணவருக்கு தெரியவர, பெரிய சண்டை வெடித்தது.
ஒருமுறை, 'டிவி' சீரியல் பிரபலம் சந்தோஷி நடத்தும், 'பிளஷ்' பியூட்டி சலுான் மற்றும் பயிற்சி மையத்தின் வீடியோக்களை பார்த்தேன். வீட்டில் இருப்போரிடம் திட்டு வாங்கி, சண்டை போட்டு சென்னை சென்று, அவர் நடத்தும் அழகுக்கலை பயிற்சியில் சேர்ந்தேன்.
பயிற்சி முடிந்து வந்ததும், மீண்டும் வீட்டில் ஒரு போராட்டம் நடத்தி, 2017ல், 'கலர்ஸ்' என்ற பெயரில் பியூட்டி பார்லரை துவக்கினேன். மாதம், 20,000 ரூபாய் வருமானம் கிடைத்தது. தரமான வேலை, வாடிக்கையாளர்களை அணுகும் முறை, தொழிலில் ஆர்வம் என அனைத்தும் சேர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்கள் வட்டம் விரிவடைந்தது.
தற்போது, என் பியூட்டி பார்லரில் பல பெண்களுக்கு அழகுக்கலை பயிற்சி வழங்குகிறேன். திண்டிவனத்தில் இரு பார்லர்களை நடத்தி வருகிறேன். காலை முழுக்க பயிற்சி வகுப்புகள் எடுப்பேன். அதன்பின், பார்லர் வேலைகளை பார்ப்பேன். மாதம், 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறேன். முகூர்த்த நாட்களில், மாதம் 4 லட்சம் ரூபாய் வரை வருமானம் வரும்.
ஆரம்பத்தில், 'இந்த வேலை கூடவே கூடாது' என்று கூறிய என் குடும்பத்தினர், தற்போது எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். சிறு வயதில், விமானத்தை அண்ணாந்து வேடிக்கை பார்ப்பேன்.
தற்போது என் வேலை விஷயமாக, பல மாநிலங்களுக்கும் விமானத்தில் சென்று வருகிறேன். நமக்கு கிடைக்கும் வெற்றி, நாம் பட்ட கஷ்டத்தை எல்லாம் பஞ்சாக பறக்க வைத்துவிடும்.