PUBLISHED ON : செப் 02, 2025 12:00 AM

மாணவ - மாணவியர் எளிய முறையில் தமிழ் கற்பதற்கான வழிமுறைகளை உருவாக்கியுள்ள, சென்னை ஷெனாய் நகர், பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியை கனகலட்சுமி:
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தான் என் சொந்த ஊர் . ஆரம்பத்தில் படிப்பின் முக்கியத்துவம் தெரியாமல் தான் இருந்தேன் . எழுத்துகளை அடையாளம் தெரியாது.
நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது, விஜய லட்சுமி என்ற ஆசிரியை தான் எனக்கு தமிழ் கற்றுத் தந்து, எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தினார்.
பிளஸ் 2 முடித்ததும், ஆசிரியர் பயிற்சி முடித்து, ராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் ஆசிரியை பணியில் சேர்ந்தேன்.
நிறைய குழந்தைகளுக்கு எழுத்துகளை அடையாளம் காட்டு வதில் சிக்கல் இருந்தது. அதனால், தமிழ் மொழியை எளிமைப்படுத்தி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன்; குழந்தைகளிடம் மாற்றம் தெரிந்தது.
அதை பார்த்த கல்வி அலுவலர், ஆசிரி யர்களுக்கு பயிற்சி எடுக்கும் ஆசிரியர் பயிற்றுநராக என்னை நியமித்தார். இடைப்பட்ட காலத்தில், எம்.ஏ., - பி.எட்., படித்தேன். அப்போது தான், தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சியை துவக்கினேன்.
சென்னை வந்தால் ஆய்வுப்பணி இன்னும் எளிமையாக இருக்கும் என்று பணி மாறுதலாகி, ஷெனாய் நகருக்கு வந்தேன். அனைவரும் என்னை முட்டாள் மாதிரி பார்த்தனர். 'இந்த ஆய்வு அப்படி என்ன கொடுக்கப் போகுது?' என்று கேட்டனர். அடுத்த தலைமுறை குழந்தைகளை நினைத்து, தைரியத்துடன் அடுத்த அடி எடுத்து வைத்தேன்.
உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் விஜயராகவன் தலைமையில் ஆய்வு படிப்பை துவக்கினேன் .
விழுப்புரம் மாவட்டத்தில் ஆறு அரசு பள்ளிகளை தேர்வு செய்து, தமிழ் மொழி கற்பிக்கும் முறை குறித்து ஆசிரியர் களுக்கு பயிற்சி கொடுத்தேன்.
ஆசிரியர்கள் அதை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது, மாணவர் களிடம் வித்தியாசத்தை உணர முடிந்தது.
கள ஆய்வு வெற்றியடையவே, தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகுவதற்கு பயன்படுத்தப்படும், 'க்யூ.ஆர்., கோடு' மற்றும் வீடியோக்களுடன் கூடிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டேன்.
உலகிலேயே முதன் முறையாக, 'தமிழ் வாசிப்பு திறனில் ஏற்படும் சிக்கல்களும், தீர்வுகளும்' என்ற தலைப்பில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.
லண்டன் க்ராய்டன் தமிழ் சங்கம், பிரிட்டன் பார்லிமென்டிற்கு சமீபத்தில் என்னை அழைத்து விருது கொடுத்து கவுரவித்தது.
மேலும், அங்குள்ள பள்ளிகளிலும், தமிழ் சங்கங்களிலும் தமிழ் வகுப்புகள் எடுத்துள்ளேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழா விலும் பங்கேற்றேன்.
இந்த அழைப்பையும், விருதையும் ஆரம்பமாகத் தான் பார்க்கிறேன். தமிழ் தேடல் இன்னும் தொடரும்!