PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM

ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூ., தேசியக்குழு உறுப்பினர் முத்தரசன் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்; இது கண்டனத்துக்குரியது. ‘கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சொந்தமானவை அல்ல’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது, தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும்.
கோவில் சொத்துக்களை பற்றி காம்ரேட்களுக்கு என்ன கவலை? ஆக்கிரமிப்பு நிலத்தில் குடியிருக்கும் மக்களின் ஓட்டுகள் தான் அவங்களுக்கு முக்கியம்!
மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., பேட்டி: தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ், தன் மீதான வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வார். நீதிமன்றம் தான் இறுதி தீர்ப்பை சொல்லும்.
தி.மு.க.,வின் கூட்டணி கட்சி என்ற முறையில், ‘த.வெ.க., அரசின் பழிவாங்கும் நடவடிக்கை’ன்னு குற்றஞ் சாட்டாம, மழுப்பலா கருத்து சொல்றீங்களே... கூட்டணிக்கு, ‘டாட்டா’ காட்டும் முடிவுக்கு வந்துட்டீங்களா?
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வட தமிழக தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் பேட்டி: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அரசியல் ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலோ மற்றவர்களை தவறாக பேச மாட்டார். அவர் ரொம்ப பயந்த சுபாவம் கொண்டவர்; மனித நேயம் கொண்டவர்; மற்றவர்கள் மீது ரொம்ப அக்கறை செலுத்துவார். அவருடன் நான் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, கரூரில் கட்சி நிர்வாகி ஒருவர் கீழே விழுந்த தகவல் வந்ததும் பதறி விட்டார்; டாக்டரிடம் மூன்று முறை சிகிச்சை குறித்து விசாரித்தார். அப்படி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது அவர் அக்கறை செலுத்துபவர்.
இப்படிப்பட்ட நற்குணங்கள் கொண்ட ஸ்டாலின், தீபாவளி பண்டிகைக்கு மட்டும் ஏன் வாழ்த்து சொல்ல மாட்டேங்கிறாரு?
தி.மு.க., இளைஞரணி செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி அறிக்கை:
த.வெ.க., அரசின் கையாலாகாத்தனத்தால், விலைவாசி உயர்வில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. பண்டிகை நேரம் பார்த்து, ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கின்றனர். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழகத்தை பின்னோக்கி இழுத்து செல்லும் இந்த, ‘சர்க்கஸ்’ கும்பலின் ஆட்டத்திற்கு, மக்களே தக்க பாடம் புகட்டுவர்.
- உங்க கருத்தை பார்த்தால், ‘பண்டிகை முடிஞ்சதும் ஆவின் பொருட்களின் விலைகளை ஏத்தியிருக்கலாம்’னு சொல்றீங்களோன்னு தோணுது!
