PUBLISHED ON : நவ 02, 2026 12:00 AM

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளரும், திரைப்பட இயக்குநருமான முரளி அப்பாஸ் பேட்டி: தமிழ் திரை யுலகில் 75 வயதிலும் நடித்து, படத்தை வெற்றி பெற வைக்க முடியும் என்ற பிரமிப்பை உருவாக்கியவர் ரஜினி. ஜெயிலர் – 2 படத்தை மும்பையில், ‘ரிலீஸ்’ செய்ததால், ஹிந்தி படம் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு பின், ரஜினி, கமல் தான், ‘டாப் – 2’வாக இருக்கின்றனர். விஜய், அஜித், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் வந்த பின்னும், கமல், ரஜினி தான், ‘டாப் – 2’ நடிகர் களாக ஜொலிக்கின்றனர்.
ரஜினிக்கு கிடைக்கும் புகழ் வெளிச்சத்தில் கமலையும் சேர்த்து நனைய விடுறீங்களே... நீங்க சாமர்த்தியசாலி தான்!
பா.ஜ., தமிழக செயலர் வினோஜ் செல்வம் அறிக்கை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, யாரும் எதிர்பாராத மிகப்பெரிய பரிசை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. புற்று நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், 543 வகை மருந்துகளுக்கான விலையை 70 – 90 சதவீதம் குறைப்பதற்கு, பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை, ஓட்டு அறுவடைக்காக செயல்படுத்தும் கவர்ச்சி திட்டங்களை விட பல மடங்கு உயர்வானது.
கண்டிப்பாக... எந்த தேர்தலும் இல்லாத நேரத்தில் வெளியான இந்த அறிவிப்பு, புற்று நோயாளிகளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி: தங்களது சுய லாபத்திற்காகவும், பதவிக்காகவும் அ.தி.மு.க.,வை விட்டு செல்பவர்கள் நிலை, ஆற்றில் விடப்பட்ட காகித கப்பல் போன்றது தான்.
உங்களிடம் இருந்து த.வெ.க.,வுக்கு போன செங்கோட்டையன், நிர்மல்குமார் எல்லாம் இன்று எப்படி இருக்காங்கன்னு பார்த்துட்டுமா இப்படி பேசுறீங்க?
தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி அறிக்கை:
மக்கள் பணம் 5,000 கோடி ரூபாயை கொள்ளை அடித்த பி.எல்.எம்., பிரேம்குமாருக்கும், துாய சக்தி முதல்வருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் நடத்தி, மக்கள் முதலீடு செய்த பணத்தை, தன் சொந்த கணக்கில் வரவு வைத்துக் கொண்ட பிரேம்குமாரை, கேரள போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பிரேம்குமார் தான், முதல்வர் விஜயை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். த.வெ.க.,வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, பிரேம்குமாருக்கு சொந்தமான பஸ்கள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
தி.மு.க., ஆட்சியில், அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவியை பலாத்காரம் செய்த உங்க கட்சி நிர்வாகி ஞானசேகரன், நிறைய அமைச்சர்களின் நிகழ்ச்சிகளுக்கு பிரியாணி, ‘சப்ளை’ பண்ணி, அவங்களுடன் படம் எடுத்துக்கிட்டதை மறந்துட்டீங்களா?
