PUBLISHED ON : ஆக 17, 2025 12:00 AM

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் உலையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், திருவள்ளுவர் சிலை, திறன்மிகு வகுப்பறை திறப்பு விழா நடந்தது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா பேசும்போது, 'கற்க கசடற கற்பவை கற்றபின் அதற்குத் தக' என்று திருக்குறளில், 'நிற்க' என்ற வார்த்தையை தவற விட்டு பேசினார். உடனே, மேடை முன்பு அமர்ந்திருந்த மாணவர்கள் பலரும், 'திருக்குறள் தவறு' என்று கூச்சலிட்டனர். அதை கண்டுகொள்ளாமல் அவர் பேசி முடித்தார்.
கடைசியாக மகேஷ் பேசும்போது, 'திருக்குறளில் நிற்க என்ற வார்த்தையை, எம்.எல்.ஏ., தவற விட்டார். எம்.எல்.ஏ., நின்று பேசியதால் தான், நிற்க என்ற வார்த்தையை சொல்லாமல் விட்டுள்ளார்' என்று சமாளித்தார்.
இதை கேட்ட மாணவர் ஒருவர், 'நாமும் பரீட்சையில் இப்படி விளக்கம் எழுதினா மார்க் போடுவாங்க ளாடா...' என கேட்க, சக மாணவர்கள், 'ஜீரோ தான் போடுவாங்க...' என, சிரித்தனர்.