PUBLISHED ON : ஆக 18, 2025 12:00 AM

சென்னை, திருவொற்றியூர், ஒண்டிக்குப்பம் - சலவை தொழிலாளர் குடியிருப்பில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளுக்கு, முழு தொகையையும் கட்டி முடித்த, 72 பயனாளிகளுக்கு, கிரைய பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திருவொற்றியூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் பங்கேற்று, பத்திரங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமுதாய அலுவலர் ஆனந்தன் தொகுத்து வழங்கினார். அப்போது, 'கிரைய பத்திரத்தை, எம்.எல்.ஏ., அண்ணன் திருக்கரங்களால் பெறுவது பாக்கியம்' என குறிப்பிட்டார். மேலும், துவக்கம் முதல் முடிக்கும் வரை, எம்.எல்.ஏ., சங்கரை, பல முறை, 'அண்ணன்' என்றே குறிப்பிட்டார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'அரசியல்வாதிங்க தான், பதவிக்காக அண்ணன், மன்னன்னு மேடையில் கூவுவாங்க... இந்த அதிகாரி, அவங்களை விட, ஓவரா ஜால்ரா தட்டுறாரே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.