PUBLISHED ON : ஆக 19, 2025 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்தது. இதில், பழையனுார், திருவாலங்காடு, வேணுகோபாலபுரம், வீரராகவ புரம் உள்ளிட்ட ஊராட்சி பகுதி மக்கள் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.
முகாமில், திருவள்ளூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பங்கேற்றார். நிகழ்ச்சியின் துவக்கத்தில், குத்துவிளக்கு ஏற்றி வைக்க அவரிடம் அதிகாரிகள் மெழுகுவர்த்தியை கொடுத்த போது, அதை பெறாமல் ஒதுங்கியவர், அங்கிருந்த கருணாநிதியின் படத்திற்கு மலர் துாவி மரியாதை மட்டும் செய்தார்.
இதை பார்த்த கட்சி நிர்வாகி ஒருவர், 'ஈ.வெ.ரா., கொள்கையை எம்.எல்.ஏ., கையில் எடுத்துட்டாரோ...' என கேட்க, அருகில் இருந்தவர், 'தேர்தல் வர்றப்ப இப்படி எல்லாம் நடந்துக்கிட்டா, மக்கள் எப்படி ஓட்டு போடுவாங்க...?' என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.