PUBLISHED ON : ஆக 20, 2025 12:00 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, நாளை மதுரையில் நடக்கிறது. இதில், நடிகர் விஜய் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை, கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், அங்கேயே முகாமிட்டு செய்து வருகிறார்.
மதுரையின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கி, மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். மதுரை தெற்குவாசல் பள்ளிவாசலுக்கு வந்தவர், நெற்றியில் விபூதி, குங்குமத்துடன், தலையில் குல்லாவும் அணிந்திருந்தார். தொழுகை முடிந்து வெளியில் வந்தவர்களிடம் கேசரியுடன், மாநாட்டு அழைப்பிதழை கொடுத்து, 'மாநாட்டுக்கு குடும்பத்துடன் வர வாகன வசதி செய்துள்ளோம்; கண்டிப்பா வந்துருங்க' என, ஒவ்வொருவரிடமும் அன்புடன் தெரிவித்தார்.
இதை பார்த்த வழிப்போக்கர் ஒருவர், 'அழைப்பிதழ் தர்றப்பவே, கேசரி தர்றாங்களே... மாநாட்டுக்கு போறவங்களுக்கு விருந்தே தருவாங்களோ...' என கேட்க, அருகில் இருந்தவர், 'தந்தாலும் தருவாங்க... தேர்தல் வருதுல்ல...' என்றபடியே நடையை கட்டினார்.