PUBLISHED ON : செப் 01, 2025 12:00 AM

சென்னை மாநகராட்சியின், திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் நடந்தது.
இதில், ஏழாவது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் பேசுகையில், 'உயர் நீதிமன்ற ஆணைப்படி, மண் டலம் முழுதும், 52 கட்டடங்களுக்கு, 'சீல்' வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதில், ஏழை மக்களும் பாதிக்கப்படுகின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடங்களுக்கு கூட, அனுமதி வாங்கவில்லை என கூறி, சீல் வைக்கின்றனர். கட்டடங்கள் கட்டியவர்களுக்கு சரியாக வழிகாட்டுதல் வழங்கி, அந்த கட்டடங் களை வரன்முறைக்குள் கொண்டு வராமல் விட்டது அதிகாரிகள் தவறு' என, அரை மணி நேரம் பேசினார்.
அப்போது, அரங்கில் மயான அமைதி நிலவியது. இதை பார்த்த இளம் நிருபர் ஒருவர், 'வழக்கமா, அ.தி.மு.க., கவுன்சிலர் எப்ப பேசினாலும், தி.மு.க.,வினர் பதிலடி கொடுத்து, ஒரே வாக்குவாதம், சண்டையா இருக்கும்... இன்னைக்கு எல்லாரும், 'சைலன்டா' இருக்காங்களே...' என முணுமுணுத்தார்.
மூத்த நிருபர், 'இந்த சீல் வைப்பு நடவடிக்கையால, ஆளுங்கட்சி கவுன்சிலர் வார்டுகள்லயும் பிரச்னை... நமக்கும் சேர்த்து தான் பேசுறாருன்னு அமைதியா இருக்காங்க பா...' என்றபடியே, அரங்கை விட்டு கிளம்பினார்.