PUBLISHED ON : அக் 31, 2026 12:00 AM

என்.ராமகிருஷ்ணன், பழனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: ‘ஸ்டாலின் அவிழ்த்து போட்ட செருப்பை வைத்துத் தான், விஜய் இப்போது ஆட்சி செய்கிறார்’ என்று கூறியுள்ளார், தி.மு.க.,வின் பட்டிமன்ற பேச்சாளர் லியோனி.
அதாவது, ராமாயணத்தில் ராமர் அணிந்த செருப்பை சிம்மாசனத்தில் வைத்து, பரதன் ஆட்சி செய்ததை உதாரணம் காட்டியுள்ளார்.
கடந்த 1996 மற்றும் 2006 சட்டசபை தேர்தல்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோல்வி அடைந்து, கருணாநிதி முதல்வர் ஆனார். அப்படியானால், ஜெயலலிதா கழற்றிப் போட்ட செருப்பை வைத்துத்தான் கருணாநிதி ஆட்சி செய்தாரா?
கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தோல்வி அடைந்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார்.
அவரும் கூட, பழனிசாமி அவிழ்த்துப் போட்ட செருப்பை வைத்து தான், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி செய்தாரோ!
தன் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதும், இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார், லியோனி.
பேசுவதெல்லாம் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டால், பேசியது ஒன்றுமில்லை என்றாகி விடுமா?
பொதுவெளியில் எதை பேச வேண்டும்; எதைப் பேசக் கூடாது என்பது, ஒரு பட்டிமன்ற பேச்சாளருக்கு தெரியாதா என்ன!
கடந்த, 1977ல் எம்.ஜி.ஆர்., முதல்வரான போது, ‘நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சிலையில் தான், இப்போது எம்.ஜி.ஆர்., அமர்ந்துள்ளார்’ என்றார், கருணாநிதி.
அதற்கு எம்.ஜி.ஆர்., ‘ஆம்... நீங்கள் எவ்வளவு இலைகள் சாப்பிட்டு இருக்கிறீர்கள் என்பதை கண்டு பிடிப்பதற்காகத் தான், இங்கே அமர்ந்திருக்கிறேன்’ என்று பதிலடி கொடுத்தார்.
எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து, தன் மரணம் வரை, தேர்தலில் தோற்கும் போதெல்லாம், தமிழக மக்களை, ‘முட்டாள்கள், சொரணை கெட்ட ஜென்மங்கள்’ என்று திட்டித் தீர்த்தவர், கருணாநிதி.
அவரது பாணியில் தான், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோற்றதும், ‘தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவே வராது’ என்று வசை பாடினார், அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி.
ஓர் ஆரோக்கியமான எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டலாம்; ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கலாமே தவிர, இதுபோன்று, அநாகரிகமாக பேசக் கூடாது.
ஏற்கனவே, தி.மு.க., என்றால், லஞ்சம் – ஊழல் என்ற அடையாளத்துடன், ஆபாச பேச்சாளர்கள் நிரம்பிய கட்சி என்ற பெயரும் உள்ளது.
எனவே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இனியாவது பாரதி, லியோனி போன்ற வாடகை வாய்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்! lll
