தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: அக். 31

இது உங்கள் இடம்: அக். 31

இது உங்கள் இடம்: அக். 31


PUBLISHED ON : அக் 31, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னேருக்கு பின்னேராக செல்லும் த.வெ.க.,!



பெருந்தேவி வேங்கட வரதன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: தமிழக வெற்றிக் கழக அரசு, பேருந்துகளுக்கு, அக்கட்சிக் கொடியின் வர்ணத்தை பூசியுள்ளதாக எதிர்க்கட்சியினர் புலம்புகின்றனர்.

அரசு பணத்தில், கட்சியின் பெயரையும், தங்களின் பெயரையும் விளம்பரம் செய்வது தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்லவே!

அண்ணா சதுக்கம், அண்ணா நகரம், அண்ணாசாலை, அண்ணா நுாற்றாண்டு விழா படிப்பகம், அண்ணா வளைவு, அண்ணா மேம்பாலம்...

இன்னும், ஈ.வெ.ராமசாமி, கருணாநிதி பெயரில் சாலைகள், தெருக்கள், நகர்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள் என எவ்வளவோ உள்ளன.

கடந்த 1967க்கு முன், இந்த விளம்பர வியாதி தமிழக அரசியலில் இல்லை.

முன்னாள் காங்கிரஸ் முதல்வர்கள் காமராஜர், பக்தவத்சலம் மற்றும் அமைச்சர்கள் சி.சுப்பிரமணியம், கக்கன் ஆகியோருக்கு, தங்கள் பெயர்களை விளம்பரப்படுத்திக் கொள்ள தெரியவில்லை.

கடந்த 1954ல், இந்தியாவின் தொழில் மாநிலமாக தமிழகத்தை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக, சென்னையில் உலக வர்த்தக பொருட்காட்சியை நடத்த திட்டமிட்டார், முன்னாள் முதல்வர் காமராஜர்.

அதற்காக, காமராஜரும், அதன்பின் முதல்வரான பக்தவத்சலமும் கடுமையாக உழைத்ததன் பலனாக, அதற்கான அனுமதியும் கிடைத்தது.

ஆனால், 1967ல் தி.மு.க., ஆட்சிக்கு வரவே, அத்திட்டத்தை உரிமை கொண்டாடி, விளம்பரப்படுத்தி, பொருட்காட்சி நடந்த இடத்திற்கு, அண்ணா நகர் என்று பெயரை சூட்டிக் கொண்டது.

பொருட்காட்சிக்காக அத்தனை உழைப்பையும் கொடுத்தது, காங்கிரஸ்; பெயர் வைத்துக் கொண்டதோ தி.மு.க.,!

இதே போன்று, ஜெயலலிதா ஆட்சியிலோ, பேருந்துகளுக்கு ஜெ.ஜெ., என்றே பெயரிடப்பட்டன.

இப்படி, அனைத்திலும் விளம்பர அரசியல் செய்த இவர்கள் தான் இன்று, ‘த.வெ.க., அரசு, பேருந்துகளுக்கு, அதன் கட்சிக் கொடி வர்ணத்தை பூசுகிறது; மகளிர் பயணத்தை, ‘வெற்றிப் பயணம்’ என்று மாற்றுகிறது’ என்கின்றனர்.

முன்னேர் சென்ற வழியில் தானே பின்னேர் செல்லும்; கழகங்கள் காட்டிய வழியில், த.வெ.க., பின் தொடர்கிறது. இதற்காக, இரு திராவிட கட்சிகளும் மகிழ வேண்டுமே தவிர, துாற்றக் கூடாது!

lll



சமூக அநீதிக்கு



பெயர் தான் சமூக நீதி!



க.சண்முகசுந்தரம், பொள் ளாச்சி, கோவை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: ‘திரைகடலோடியும் திரவியம் தேடு; யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற வாழ்க்கை முறைக்கு முன்னுரிமை கொடுத்தவர்கள், பழந்தமிழர்கள்.

பல மொழிகளை கற்றுக் கொண்டால், பல இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்ய முடியும் என்பதும், பரந்து விரிந்த இந்த உலகில், மனிதர்களாகிய நாம் அனைவரும் சகோதரர்களே என்பதுமே, அவர்களது கொள்கைகளாக இருந்தன.

இதனால் தான், தங்களுக்கென தனி முத்திரை பதித்து, வரலாற்றில் இடம் பிடித்திருந்தனர் தமிழர்கள்.

ஆனால், தமிழகத்தில் தி.மு.க., எப்போது ஆட்சிக்கு வந்ததோ, ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில், ஏழை எளிய மக்களை தமிழகத்திற்குள் முடக்கி, அவர்களை செயலிழக்க செய்து விட்டது.

இதனால் பாதிக்கப்படுவது, அரசு பள்ளி மாணவர்கள் தான்!

வசதி படைத்த மாணவர்கள் ஹிந்தி மட்டுமல்ல; தாங்கள் விரும்பும் அனைத்து மொழிகளையும் படித்து, அனைத்து போட்டிகளுக்கும் தங்களை தகுதியாக்கிக் கொள்கின்றனர்.

தி.மு.க.,வின் இந்த சமூக, ‘அநீதி’க்கு, சமூக நீதி என்று பெயர் சூட்டி, அதற்கு ஓட்டு வங்கியே இல்லாத கட்சிகள் முட்டுக் கொடுத்து, உசுப்பேத்தி, தங்களை வளமாக்கிக் கொள்கின்றன.

நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் சட்டசபை இடைத்தேர்தல்களில், தனித்து நின்று கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற ஓட்டுகளே இதற்கு சான்று!

ஒன்றுக்கும் உதவாத தன் கொள்கைகளுக்கு முட்டுக் கொடுக்க, ஓட்டு வங்கியே இல்லாத இந்த, ‘லெட்டர் பேடு’ கட்சிகளை, 50 ஆண்டுகளாக தி.மு.க., துாக்கி சுமந்து கொண்டு இருக்கிறது என்றால், இதில் காரியவாதி, லெட்டர் பேடு கட்சிகள் தானே!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us