PUBLISHED ON : அக் 26, 2026 12:00 AM

எம்.ராமையா, சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தக் கூடாது என உத்தரவாத பத்திரம் எழுதி வாங்கிய பின்பும், போராட்டம் நடத்தலாமா? அது சட்டவிரோதமான செயல் அல்லவா? பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நடப்பதை பாருங்கள்... அமைதியான போராட்டமாக தொடங்கி, தீ வைப்பு, கொள்ளை என மாறியுள்ளது.
‘போராட்டத்தை தடுக்கும் நோக்கம் போலீசாருக்கு இல்லை. அதேசமயம், அந்நிய நபர்கள் உள்ளே நுழைந்து, போராட்டத்தின் நோக்கத்தை கெடுக்க முயன்றால், உங்கள் பெயருக்கு தான் அவப்பெயர் ஏற்படும்’ என, பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு புத்திமதி கூறுவது போன்று, கரப்பான் கட்சியை சேர்ந்த அபிஜித் தீப்கே, அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோருக்கு அறிவுரை கூறியுள்ளார், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம்.
இவரது அறிவுரை எல்லாம், காது கேளாதோர் செவியில் ஊதிய சங்கு தான்!
ஏனெனில், இந்த கரப்பான்கள் வெறும் அம்புகள் தான்; இந்த அம்புகளை எய்து கொண்டிருப்போர், அந்நிய நாட்டின் அதிகார சக்திகள்!
நம் நாட்டில் குழப்பத்தை விளைவித்து, மத்திய பா.ஜ., அரசை கலைத்து, தங்கள் தலையசைப்புக்கு ஏற்ப ஆடக்காத்திருக்கும், காங்கிரஸ் கட்சியிடம் நிர்வாகத்தை கொடுக்க திட்டம் தீட்டி, இவர்களை வைத்து காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
இதில், பிரான்ஸ் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டி, அறிவுரை கூறினால் மட்டும், இவர்கள் காதில் ஏறிவிடுமா என்ன!
அப்படி வன்முறை சம்பவங்கள் இங்கு நிகழ வேண்டும் என்பது தானே இவர்களது நோக்கமே!
மேலும், கரப்பான்கள் இந்நாட்டு சட்டதிட்டங்களுக்கோ, நீதிமன்ற உத்தரவுகளுக்கோ கட்டுப்பட மாட்டார்கள்.
அப்படி கட்டுப்படுவோராக இருந்தால், ‘போராட்டம் நடத்த மாட்டோம்’ என்று உத்தரவாத பத்திரம் எழுதி கொடுத்த பின்பும், போராட்டத்தில் இறங்குவரா?
‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’ என்பது போல், மூளை சலவை செய்யப்பட்டு, நாட்டிற்குள் இறக்கி விடப்பட்டுள்ள இவர்களிடம் பேச்சு நடத்துவதாலோ, புத்திமதி சொல்வதாலோ எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.
மாறாக, இவர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து, இவர்களில் எவராவது நாட்டிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தால், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, நிரந்தரமாக கூண்டில் அடைக்க வேண்டும். அப்போது தான், அந்நிய சக்திகளின் துாண்டுதலுக்கு நம் நாட்டு இளைஞர்கள் இரையாவது தடுக்கப்படும்!
