PUBLISHED ON : அக் 26, 2026 12:00 AM

பேச்சிலும், செயலிலும் எப்படி ஒற்றுமை இருக்கும்?
க.சோணையா, திருமங்கலம்-, மதுரை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் நடந்த தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தில், தமிழக முதல்வரை அவதுாறாக பேசியதுடன், முதல்வர் செல்லும் வழியில் கூட்டத்தை கூட்டி, இடையூறு செய்ததாக கூறி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கார்த்திகாவை, போலீசார் கைது செய்து உள்ளனர்.
இதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை கைது செய்து, அச்சுறுத்துவதன் வாயிலாக, த.வெ.க., அரசு எதை சாதிக்க நினைக்கிறது? சகிப்புத்தன்மையும், ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்கிறது, த.வெ.க., அரசு' என்று கூறியுள்ளார்.
இதே ஸ்டாலின், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில், பட்டியலின, த.வெ.க., வேட்பாளர் சத்தியபாமாவை, 'பெட்டி பாமா, பல்டி பாமா, இந்த உடம்பை வைத்து எப்படி பல்டி அடித்தார்' என்று நக்கலடித்து, நையாண்டி செய்தார்.
அப்போது எங்கே போனது இவரது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான பாசம்?
இதேபோன்று தான், சமீபத்தில், சிவகங்கை மாவட்டத்தில், தி.மு.க., நிர்வாக மறுசீரமைப்பு கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு, மானாமதுரை முன்னாள் சட்டசபை உறுப்பினர் தமிழரசி வந்திருந்தார். இவர், பட்டியல் இன பெண் என்பதால், மரியாதை கொடுக்காமல் அவமானப்படுத்தி, 'வெளியே போ' என்று ஒருமையில் பேசி, கூட்டத்தை விட்டு வெளியேற்றினார், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன்.
இது ஸ்டாலினுக்கு தெரியாமலா இருக்கும்?
பேச்சுக்கு பேச்சு சமூக நீதி என்பதும், செயலில் அதற்கு நேர் மாறாக நடந்து கொள்வதும் தான், தி.மு.க.,வின் கொள்கை எனும் போது, ஸ்டாலின் பேச்சு மற்றும் செயலில் மட்டும் எப்படி ஒற்றுமை இருக்க முடியும்?

நாங்களே மின்சாரம் கொடுத்தாலும் கட்டணம் வசூலிப்பதா?
க.முத்துசங்கர், வைத்திலிங்காபுரம், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: என் வீட்டில், 2 கிலோ வாட் சோலார் பேனல் அமைத்துள்ளேன். சோலார் பேனல் அமைப்பதற்கு முன், 5,000 ரூபாய் வரை கரன்ட் பில் வந்தது. என் மகனின் குடும்பம் வெளியூர் சென்று விட்டதால், தற்போது, 200 யூனிட் தான் செலவாகிறது.
நியாயப்படி பார்த்தால், இந்த, 200 யூனிட் மின்சாரம் அரசின் இலவச மின்சார திட்டத்தில் கழிக்கப்பட வேண்டும்.
ஆனால், சோலார் பேனல் வாயிலாக, இரண்டு மாதத்திற்கு, 600 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்து, மின்வாரியத்திற்கு கொடுத்தும், மின் வாரியத்திலிருந்து இரு மாதங்களுக்கு ஒருமுறை, 205 ரூபாய், 'நெட் ஒர்க்' கட்டணத்திற்கான, 'பில்' எங்களுக்கு வருகிறது.
நாங்கள் செலவு செய்த மின்சாரத்தை கழித்தால் கூட, 400 யூனிட் மின்சாரத்தை மின்வாரியத்திற்கு தருகிறோம். அப்படியும், 205 ரூபாய் கட்டச் சொன்னால் எப்படி?
சோலார் பேனல் வாயிலாக, மின்சாரம் கொடுப்போருக்கு மின்வாரியம் பணம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை; அவர்களிடம், இதுபோன்று, 'நெட் ஒர்க்' சார்ஜ் வாங்குவதை தவிர்க்கலாம் அல்லவா?
ஒடிஷாவில் சோலார் பேனல் போட்டதால், பல குடும்பங்களுக்கு, மின் கட்டணம், 'ஜீரோ பேலன்ஸ்' வருகிறது. இதேபோல் தமிழகத்திலும், 'நெட்வொர்க்' சார்ஜ் போடாமல், ஜீரோ பேலன்ஸ் வரும்படி செய்தால் அதிகமானோர் வீடுகளில் சோலார் பேனல் அமைப்பார்கள் அல்லவா?
தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்!
