PUBLISHED ON : ஆக 25, 2025 12:00 AM

கோவை தெற்கு தொகுதி, பா. ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்: கர்நாடகாவின் தர்மஸ்தலாவில், 800 ஆண்டுகள் பழமையான மஞ்சுநாதா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் ஏராளமான பெண்களின் உடல்களை புதைத்ததாக பொய் புகார் அளித்தவரின் பின்னணியில், திருவள்ளூர் தொகுதி காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் இருப்பதாக, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். சசிகாந்த் செந்தில் மீதான குற்றச்சாட்டு குறித்து, உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும்.
டவுட் தனபாலு: சசிகாந்த் செந்தில் மீது, கர்நாடக காங்., அரசு எப்படி விசாரணை நடத்தும்... தமிழகத்தில் அதன் கூட்டணி கட்சியான, தி.மு.க., வும் விசாரணை நடத்தாது... அதனால, சசிகாந்த் செந்திலிடம் மத்திய விசாரணை அமைப்புகள், 'கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தினால் தான், இந்த விவகாரத்தில் மர்மங்கள் விலகும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: கட்சி ஆரம்பித்தவுடன் யாரும் ஆட்சியை பிடித்து விட முடியாது. செடி உடனே மரமாகி விடாது. எம்.ஜி.ஆர்., கட்சி துவங்கி, ஐந்து ஆண்டு காலம் தன்னுடைய கடும் உழைப்பை கொடுத்து பணியாற்றினார்; பின் தான், ஆட்சியை பிடித்தார். ஜெயலலிதாவும் அப்படி தான்; எடுத்ததுமே முதல்வர் ஆகி விடவில்லை; மக்களுக்கு உழைத்து தான் முதல்வரானார்.
டவுட் தனபாலு: எம்.ஜி.ஆர்., கட்சி துவங்கும் முன்பே, பல வருஷங்கள், எம்.எல்.ஏ.,வாகவும், ஜெ., ராஜ்யசபா எம்.பி.,யாகவும் மக்கள் பணியாற்றி இருக்காங்க... அவ்வளவு பெரிய மக்கள் செல்வாக்கு உள்ள அவங்களே, பல வருஷங்களுக்கு பின் தான், முதல்வர் நாற்காலியில் அமர முடிஞ்சது... இது, இளம் நடிகர்களுக்கு ஏன் புரியலை என்ற, 'டவுட்' தான் வருது!
இந்திய, கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: கடந்த, 2019 லோக்சபா தேர்தல் செலவுகளுக்கு, தி.மு.க., பணம் கொடுத்தது. ஆனால், கையில் கொடுக்கவில்லை. தி.மு.க.,வின் வங்கி கணக்கில் இருந்து, இந்திய, கம்யூ., வங்கி கணக்கிற்கு அனுப்பியது. எங்களுக்கு மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூ., - ம.தி.மு.க., - வி.சி., - முஸ்லிம் லீக் கட்சிகளுக்கும், தி.மு.க., பணம் கொடுத்தது.
டவுட் தனபாலு: அது சரி... கருணாநிதி காலத்தில், கூட்டணி கட்சிகளுக்கு, 'சீட்' மட்டும் தான் தருவார்... ரூபாய் நோட்டை கண்ணுலயே காட்ட மாட்டாரு... இதனால, அடுத்த தேர்தலுக்கு எல்லாரும் எதிர் முகாமுக்கு பாய்ஞ்சிடுவாங்க... சீட்களுடன், நோட்டுகளையும் ஸ்டாலின் அடிச்சு விடுறதால தான், ஏழெட்டு வருஷமா கூட்டணி கட்சிகள் பசை போல, தி.மு.க.,வுடன் ஒட்டி யிருக்கு என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!