PUBLISHED ON : ஆக 26, 2025 12:00 AM

இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன்: தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்துள்ளது. இதற்கான தேர்தலை எப்போது நடத்தப் போகின்றனர் என்பது குறித்து, தமிழக அரசு தெளிவான அறிவிப்பு வெளியிடவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அது குறித்தே யோசிக்கின்றனர்.
டவுட் தனபாலு: தமிழக சட்டசபை தேர்தல் முடிஞ்ச பிறகு தான் அது பற்றி கவலைப்படுவாங்க... இப்பவே உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி, அதுல பதவி கிடைக்காத கட்சியினர், சட்டசபை தேர்தல்ல, 'உள்ளடி' வேலைகள்ல இறங்கிட்டா, முதலுக்கே மோசம் வந்துடும் என்பதால், ஆளுங்கட்சியினர் உஷாராகவே இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
கேரள பா.ஜ., தலைவர் ராஜீவ் சந்திரசேகர்: கடந்த, 2018ல் கேரள முதல்வர் பினராயி விஜயன், பெண்களை சபரிமலை செல்ல அனுமதித்து, பாரம்பரியத்தை முறியடித்ததுடன், அதை எதிர்த்து போராடிய அய்யப்ப பக்தர்கள் பலரையும் சிறையில் அடைத்தார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் ஹிந்துக்கள் நம்பிக்கையை புண்படுத்தினர். அடுத்த ஆண்டு, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், ஓட்டு வங்கியை அதிகரிக்கும் நோக்கில், சபரிமலையில் நடக்கும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில், பினராயி விஜயனுடன் பங்கேற்க ஸ்டாலின் ஒப்புக் கொண்டுள்ளார்.
டவுட் தனபாலு: தேர்தல் வந்துட்டா, திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பல்வேறு அவதாரங்கள் எடுப்பாங்க... திருத்தணிக்கு போய் கையில் வேல் ஏந்தி, 'போஸ்' கொடுப்பாங்க... சபரிமலைக்கு வருவாங்க... ஏதாவது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு போனாலும் போவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி: ஸ்டாலினுக்கு பிறகு, உதயநிதி தான் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். ஏற்கனவே, 'முதல்வர் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை ; அவர் முதல்வராக வாய்ப்பே இல்லை' என, அ.தி.மு.க., தலை வர்கள் பிரசாரமே செய்த னர் . ஆனாலும், அவர் முதல்வரானார். அதேபோல, உதயநிதியும் முதல்வர் ஆவார். அப்படி சொன்னவர்களுக்கு தான் கட்டம் சரியில்லாமல் போய் விட்டது.
டவுட் தனபாலு: அது சரி... அ.தி.மு.க.,விலும் முக்கிய துறைகளுக்கு அமைச்சரா இருந்துட்டு, தி.மு.க.,வுக்கு வந்தும் மத்திய அமைச்சர், மாநில அமைச்சர்னு கொழிக்கிறீங்களே... யாருக்கு கட்டம் சரியா இல்லாம போனாலும், உங்களுக்கு நல்லாவே இருக்கு என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!