PUBLISHED ON : ஆக 05, 2026 12:00 AM

'வதந்தி பரப்புவதே இவருக்கு வேலையாகப் போய் விட்டது...' என, சிவசேனா - உத்தவ் கட்சி எம்.பி., சஞ்சய் ராவத் பற்றி எரிச்சலுடன் பேசுகின்றனர், மஹாராஷ்டிரா மாநில பா.ஜ.,வினர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மத்திய கல்வி அமைச்சராக பதவி வகித்த, பா.ஜ.,வின் தர்மேந்திர பிரதான், 'நீட்' தேர்வு முறைகேடு பிரச்னையால், சமீபத்தில் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சராக உள்ள பிரஹலாத் ஜோஷி, கல்வி அமைச்சர் பதவியை கூடுதலாகக் கவனித்து வருகிறார். விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் ராவத், 'கல்வி அமைச்சர் பதவிக்கு திறமையான, கல்வியில் சிறந்த ஒருவர் தேவை. இப்போதைக்கு பா.ஜ.,வில் இருப்பவர்களில், தேவேந்திர பட்னவிஸ் தான், அந்தப் பதவிக்கு பொருத்தமானவர்; இது, பிரதமர் நரேந்திர மோடிக்கும் தெரியும். அதனால், தேவேந்திர பட்னவிஸ் விரைவில் கல்வி அமைச்சராக பதவியேற்பார்.
'மஹாராஷ்டிராவுக்கு புதிதாக ஒருவர் முதல்வராக வாய்ப்புள்ளது; அவர், வழக்கம் போல் அதிகம் அறிமுகமில்லாத நபராகவே இருப்பார்...' என்றார்.
இது குறித்து, தேவேந்திர பட்னவிஸ் ஆதரவாளர்கள் கூறுகையில், 'எங்கள் தலைவர் மஹாராஷ்டிர முதல்வராக இருப்பதில், சஞ்சய் ராவத்துக்கு என்ன பிரச்னை; வஞ்சப் புகழ்ச்சியில் இதுபோல் உளறி வருகிறார்...' என்கின்றனர்.
