PUBLISHED ON : ஆக 06, 2026 01:49 AM

'முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் போன்ற தோற்றத்தில் இருப்பது என் குற்றமா...?' என கண்ணீர் வடிக்கிறார், காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., செய்யது நசீர் ஹுசேன்.
பா.ஜ.,வைச் சேர்ந்த தர்மேந்திர பிரதான், 'நீட்' வினாத்தாள் கசிவு முறைகேடு காரணமாக, தன் மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக, பார்லிமென்டில் சமீபத்தில் விவாதம் நடந்தது. காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.,யான ரேணுகா சவுத்ரி, 'நீட் முறைகேட்டை கண்டித்தும், தர்மேந்திர பிரதானை கண்டித்தும் ஆவேசமாகப் பேசினார். அப்போது அவரது அருகில், தர்மேந்திர பிரதான் போன்ற ஒருவர் அமர்ந்திருந்தார்.
இதை, 'டிவி' நேரலையில் பார்த்த காங்கிரசார், 'எங்கள் கட்சியின் பெண் சிங்கம் ரேணுகா சவுத்ரி, தர்மேந்திர பிரதான் முகத்துக்கு எதிராகவே, அவரை வறுத்து எடுத்து விட்டார்...' என, சமூக வலைதளங்களில் புகழ்ந்து எழுதினர்.
ஆனால், ரேணுகா சவுத்ரி அருகில் அமர்ந்திருந்தது தர்மேந்திர பிரதான் அல்ல. அவரைப் போன்ற முகத்தோற்றம், மீசை, சிகை அலங்காரத்தில் இருந்த காங்கிரஸ் எம்.பி., செய்யது நசீர் ஹுசேன்.
சமூக வலைதளங்களில் தன்னை தர்மேந்திர பிரதான் என, பலரும் விமர்சித்ததை பார்த்து பொங்கி எழுந்த ஹுசேன், 'நானும் காங்கிரஸ்காரன் தான்; தயவு செய்து விமர்சிப்பதை நிறுத்துங்கள்...' என விளக்கம் அளித்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ரேணுகா சவுத்ரியோ, 'எனக்கு கிடைத்த பாராட்டை, பாதியிலேயே தடுத்து நிறுத்தி விட்டாரே ஹுசேன்...' என புலம்புகிறார்.
