PUBLISHED ON : ஆக 04, 2026 12:00 AM

'வம்பை விலை கொடுத்து வாங்குவதே, இவருக்கு வேலையாகப் போய்விட்டது...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுலை நினைத்து கவலைப்படுகி ன்றனர், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள்.
பிரதமர் மோடியின் சமூகத்தை பற்றி அவமதிப்பாக பேசியதாக, ஏற்கனவே ராகுல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்து, அவரது எம்.பி., பதவியே பறிபோனது.
பின், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அவருக்கு மீண்டும் எம்.பி., பதவி கிடைத்தது. வெளிநாடுகளுக்கு சென்று, பிரதமர் மோடி மற்றும் நம் ராணுவத்துக்கு எதிராக பேசியதாகவும், ராகுல் மீது தொடர்ந்து புகார்கள் வந்தன; இது, காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமீபத்தில் பார்லிமென்ட் வளாகத்தில் வீதி நாடக பாணியில் நடந்த போராட்டத்தில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட்டதாக, ராகுல் மீது மீண்டும் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, நாடு முழுதும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் ராகுல் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 'இந்த வழக்குகளின் தீர்ப்புகள், ராகுலுக்கு பாதகமாக வந்தால் என்ன செய்வது?' என, காங்., தலைவர்கள் கவலைப்படுகின்றனர்.
'தேர்தல்களில் காங்., தொடர்ந்து தோல்வியை சந்தித்தாலும், நாட்டின் எதிர்கால பிரதமர் என, ராகுலை சித்தரித்து வருகிறோம். அவரோ, தேவையில்லாமல் சென்று வழக்குகளில் சிக்குகிறார். இவரை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியவில்லையே...' என, அக்கட்சி நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
