மலையாள திரையுலகிற்கு நான் தேவைப்படவில்லை : சுவாசிகா வருத்தம்
நடிகை சுவாசிகா தமிழில் இதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான 'லப்பர் பந்து' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரிய அளவில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக இந்த வருடம் மட்டுமே அவரது நடிப்பில் 'கருப்பு', 'நூறு சாமி' மற்றும் சமீபத்தில் வெளியான 'ஆகாயத்தில் ஒரு தாமரை' என மூன்று படங்கள் வெளியாகி உள்ளன. அதே சமயம் மலையாளத்தில் அவர் படங்கள் நடிப்பது அரிதாகவே இருக்கிறது. இது குறித்து சமீபத்திய பேட்டியில் தனது ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் சுவாசிகா.
இது பற்றி அவர் பேசும்போது, மலையாள படங்களில் ஏன் நடிப்பதில்லை என அடிக்கடி கேட்கிறார்கள். எனக்கே அதற்கான பதில் தெரியாது. ஆனால் நான் புரிந்து கொண்ட காரணம் இதுதான். எனக்கு தமிழ் அல்லது தெலுங்கு படங்களில் அதிக முக்கியத்துவம் என்பதாலோ, மலையாளத்தில் நடிக்க மாட்டேன் என்றோ நான் ஒருபோதும் சொன்னதில்லை. மலையாள சினிமாவுக்கு என்னை தேவை இல்லை என்பதுதான் நேர்மையான உண்மை. இதை சொல்வதற்கு யாரையும் கண்டு பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. இது எனது கருத்து மற்றும் ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.