சிவாஜி பரிந்துரைத்து நாயகனான நடிகர் தேங்காய் சீனிவாசன்
தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக ஆரம்பத்தில் அறியப்பட்டு, பின்னர் குணச்சித்திரம், வில்லன் ஆகிய கதாபாத்திரங்கள் ஏற்று, முத்தான நடிப்பை வழங்கி, தனி முத்திரை பதித்த தரமான திரைக்கலைஞர்கள் வெகு சிலரில் குறிப்பிடும்படியான ஒருவர்தான் நடிகர் தேங்காய் சீனிவாசன். “ஒரு விரல்” என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு விஜயம் செய்த இவர், எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என அனைத்து கதாநாயக நடிகர்களோடும் இணைந்து பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து, இவருக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தவர். மெட்ராஸ் பாஷை முதல் பிராமணாள் பாஷை வரை அனைத்தும் இவருக்கு அத்துப்படி.
இவரது நகைச்சுவை நடிப்பிற்கு படங்கள் ஏராளம் என்பதுபோல், இவரது குணச்சித்திர நடிப்பிற்கு ஒரு “அடுக்கு மல்லி”, “படிக்காத பண்ணையார்” போன்ற ஒருசில திரைப்படங்களைக் கூறலாம். “வரவேற்பு”, “மயங்குகிறாள் ஒரு மாது”, “தர்மயுத்தம்”, “தாய்வீடு”, “தங்கமகன்” போன்ற பல திரைப்படங்களில் இவரது கொடூர வில்லன் கதாபாத்திரத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தன என்பதில் யாருக்கும் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இப்படி பன்முகத் தன்மையோடு பல காலம் கலையுலகில் பயணித்து வந்த நடிகர் தேங்காய் சீனிவாசன் ஓரிரு திரைப்படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கின்றார். அப்படி அவர் நாயகனாக நடித்து வெளிவந்த ஒரு திரைப்படம்தான் “கலியுகக் கண்ணன்”.
கவிஞர் வாலி எழுதிய “ஸ்ரீ கிருஷ்ண விஜயம்” என்ற மேடை நாடகத்தின் வெள்ளித்திரை வடிவம்தான் இந்த “கலியுகக் கண்ணன்” திரைப்படம். மேடையில் வெற்றி பெற்ற இந்த நாடகத்தை திரைப்படமாக உருவாக்க எண்ணியபோது, படத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடிக்க வேண்டும் என்பது தயாரிப்புத் தரப்பின் விருப்பமாக அப்போது இருந்தது. நாடகத்தைப் பார்த்த நடிகர் சிவாஜி கணேசன், நாடகத்தில் நாயகனாக நடித்திருந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு, அவரே திரைப்படத்திலும் அந்தக் கதாபாத்திரத்தை செய்தால் நன்றாக இருக்கும் என்ற தனது அபிப்பராயத்தைச் சொல்ல, அதன் பின்னர் திரைப்படத்திலும் நடிகர் தேங்காய் சீனிவாசனே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துமிருந்தார்.
“அஜந்தா எண்டர்பிரைசஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ், என் இளங்கோ தயாரித்திருந்த இந்தத் திரைப்படத்தில், நடிகர் தேங்காய் சீனிவாசனோடு ஜெய்சங்கர், ஜெயசித்ரா, சவுகார் ஜானகி, வி கே ராமசாமி, நிலகண்டன் என பலர் நடித்திருந்தனர். இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கியிருந்த இத்திரைப்படத்தின் கதை வசனம் மற்றும் பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார். படத்திற்கு இசையமைத்திருந்தவர் வி குமார். 1974ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, வர்த்தக ரீதியாகவும் ஒரு நல்ல வெற்றித் திரைப்படமாகவே அமைந்திருந்தது இந்தக் “கலியுகக் கண்ணன்” திரைப்படம்.