பிளாஷ்பேக் : ரஜினி கே பாக்யராஜ் கூட்டணியில் வந்த திரைப்படமும் வராத திரைப்படமும்.
ரஜினி, கமல் என்ற இருபெரும் உச்ச நடிகர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த 1980 காலகட்டங்களில், எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அபாரமான திரைக்கதை வசனத்தாலும், அப்பாவித்தனமான முகபாவனை கொண்ட அற்புதமான நடிப்பாலும் பெண்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரது உள்ளம் கவர்ந்த ஓர் திரை ஆளுமையாக அப்போது வலம் வந்து கொண்டிருந்தவர்தான் இயக்குநரும், நடிகருமான கே பாக்யராஜ்.
ரஜினி, கமல் ஆகியோருக்கு இணையான தொடர் வெற்றித் திரைப்படங்களைத் தந்து கொண்டிருந்த ஒரு சகலகலா கலை வித்தகரான இவர், பிஸியாக செயலாற்றிக் கொண்டிருந்த 80களின் மத்தியில் நடிகர் ரஜினிகாந்தோடு இணைந்து இவர் நடித்துக் கொடுத்து, மாபெரும் வெற்றியை ருசித்த ஒரு திரைப்படத்தைப் பற்றியும், அதற்குப் பின்பு சில ஆண்டுகள் கழித்து, கே பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அவரே இயக்கி, நாயகனாகவும் நடித்து வெளிவந்த ஒரு திரைப்படத்தில் நடிகர் ரஜினி நடிக்க இயலாமல் போனதைப் பற்றியும்தான் நாம் இங்கு காண இருக்கின்றோம்.
காவல்துறை, சட்டம், நீதி ஆகியவற்றை மையக் கருத்தாகக் கொண்டு நடிகர் விஜயகாந்தை வைத்து தொடர் வெற்றித் திரைப்படங்களைத் தந்து
கொண்டிருந்த இயக்குநர்தான் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர். இவர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ஒரே திரைப்படம் தான் “நான் சிகப்பு மனிதன்”. 1984ஆம் ஆண்டு நடிகர் ராஜ் பப்பர், ஸ்மீதா பாட்டீல் ஆகியோர் நடித்து, ரவி சோப்ரா இயக்கத்தில் வெளிவந்த “ஆஜ் கி ஆவாஜ்” என்ற ஹிந்தி திரைப்படத்தின் தமிழாக்கமான இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர், ரஜினியை வைத்து தான் தயாரிக்க இருக்கும் “நான் சிகப்பு மனிதன்”
திரைப்படத்தைப் பற்றி இயக்குநரும், நடிகருமான கே பாக்யராஜிடம் அபிப்ராயம் கேட்டார்.
ஆயுதம் ஏதுமின்றி, தனி ஒரு ஆளாக எதிரிகளை துவம்சம் செய்யும் அதிரடி ஆக்ஷன் நாயகனான நடிகர் ரஜினிக்கு இந்தக் கதாபாத்திரம் ஏற்றதாக இல்லை என கே பாக்யராஜ் தனது அபிப்ராயத்தைக் கூறினார். கிடைத்த ரஜினியின் கால்ஷீட்டை பயன்படுத்தும் நோக்கில் படத் தயாரிப்பில் முனைப்பு காட்டிய தயாரிப்பாளர் மீண்டும் ஓரிரு நாட்கள் கழித்து, கே பாக்யராஜிடம் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருக்கிறது அதை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என கூறினார். ஆரம்பத்தில் மறுத்திருக்கின்றார் கே பாக்யராஜ். பின்னர் நடிகர் ரஜினிகாந்தும், அவரது மனைவியும் தாங்கள்தான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்புகின்றனர் என்று தயாரிப்பாளர் கூறிய பின்புதான் படத்தில் வரும் 'சின்ன சேலம்' சிங்காரம் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் கே பாக்யராஜ்.
1985ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக வந்த இந்த “நான் சிகப்பு மனிதன்” திரைப்படம் ஒரு மெகா ஹிட் திரைப்படமாக அமைந்தது நடிகர் ரஜினிகாந்திற்கு. இந்தப் படம் வெளிவந்து சரியாக 13 ஆண்டுகளுக்குப் பின்னர் கே பாக்யராஜ் தனது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பில் தானே கதாநாயகனாக நடித்து வெளியிட்ட ஒரு திரைப்படம்தான் “வேட்டிய மடிச்சுக் கட்டு”. “சரண்யா சினி கிரியேஷன்ஸ்” என்ற பதாகையின் கீழ் இவர் தயாரித்த இத்திரைப்படத்தில் 'மதுரை முத்துப்பாண்டி' என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் ரஜினிகாந்தை இவர் அணுகியபோது அவரால் அப்போது நடிக்க இயலாமல் போக, பின்னர் அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் சாய் குமாரை நடிக்க வைத்திருந்தார் கே பாக்யராஜ். அவரது மகன் நடிகர் சாந்தனு ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இத்திரைப்படம், 1998ஆம் ஆண்டு வெளிவந்து, எதிர்பார்த்த வெற்றியைப் பெற தவறியது.