வேறு கனவுடன் வந்தவர்கள்… ஹீரோவாக உயர்ந்தவர்கள்!
1980கள் முதல் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர்களில் பலரும் திரைக்கு பின்னால் இருக்கும் துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர்கள் தான். சினிமாவில் இயக்குநராகவோ, இசையமைப்பாளராகவோ, நடன இயக்குநராகவோ அல்லது தயாரிப்பாளராகவோ சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நுழைந்து, காலப்போக்கில் தவிர்க்க முடியாத ஹீரோக்களாக உருவெடுத்த தமிழ் நடிகர்களின் பட்டியல் இதோ:
1. இயக்குநர் கனவோடு வந்து ஹீரோவானவர்கள் :
கார்த்தி
மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, இயக்குநராக வேண்டும் என்பதே இவரது இலக்காக இருந்தது. ஆனால், அமீர் இயக்கிய 'பருத்திவீரன்' படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி பெற்று முன்னணி நாயகனாக உயர்ந்தார். இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ரவி மோகன் (ஜெயம் ரவி)
சினிமாவில் படத்தொகுப்பு (Editing) கற்றுக் கொண்டு, கமல்ஹாசனின் 'ஆளவந்தான்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். சிறு வயதிலேயே பரத நாட்டியமும் முறையாக பயின்றவர். பின்னர் 'ஜெயம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இன்று நடிகராக மட்டுமின்றி, டைரக்டராகவும் தனது திறமையை காட்டி வருகிறார்.
விஷால்
நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி இயக்குநராகும் முயற்சியில் இருந்தவர். பின்னர் 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, 'சண்டக்கோழி', 'திமிரு' என ஆக்ஷன் ஹீரோவாக முத்திரை பதித்தார்.
பாக்யராஜ், பார்த்திபன் & எஸ்.ஜே.சூர்யா
உதவி இயக்குனர்களாக சினிமாவிற்குள் வந்து, பிறகு இயக்குநர்களாக அறிமுகமாகித் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இவர்கள், பின்னர் ஹீரோவாகவும் நடித்துப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர். குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா 'நியூ', 'அன்பே ஆருயிரே' படங்களில் ஹீரோவாகக் கலக்கி, இன்று தமிழ் சினிமாவின் டாப் வில்லன்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.
பிரதீப் ரங்கநாதன்
'கோமாளி' படத்தின் மூலம் வெற்றி இயக்குநராக அறிமுகமான இவர், 'லவ் டுடே' மற்றும் 'டிராகன்' படங்களின் மூலம் இளைஞர்கள் கொண்டாடும் ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
2. இசையமைப்பாளராக வந்து ஹீரோவானவர்கள்
விஜய் ஆண்டனி
வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்த இவர், 'நான்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 'சலீம்', 'பிச்சைக்காரன்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து வசூல் நாயகனாக மாறினார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவே இன்றும் நடித்து வருகிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார்
இளம் வயதிலேயே முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்த இவர், 'டார்லிங்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி
பாப் இசைக் கலைஞராகவும், திரைப்பட இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி, 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் ஹீரோவாகவும் இயக்குநராகவும் வெற்றி பெற்றார்.
3. நடன இயக்குநர்களாக இருந்து ஹீரோவானவர்கள்
பிரபுதேவா
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனப் போற்றப்படும் நடன இயக்குநராக அறிமுகமாகி, 'இந்து', 'காதலன்', 'மின்சார கனவு' ஆகிய படங்களின் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். பிறகு போக்கிரி போன்ற படங்கள் மூலம் கோலிவுட், பாலிவுட் டாப் ஹீரோக்களை இயக்கவும் செய்தார்.
ராகவா லாரன்ஸ்
பின்னணி நடனக் கலைஞராகவும், நடன இயக்குநராகவும் பணியாற்றியவர். பின்னர் 'முனி' மற்றும் 'காஞ்சனா' திரைப்படத் தொடர்கள் மூலம் ஹீரோவாகவும் இயக்குநராகவும் மாபெரும் வெற்றிகளைக் குவித்தார்.
4. பிற துறைகளில் இருந்து தற்செயலாக ஹீரோவானவர்கள்
அஜித் குமார்
பைக் ரேஸிங் மற்றும் கார் பந்தயங்களில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தவர். அதற்கான நிதித் தேவைக்காக விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கி, இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
திரைப்படத் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் சினிமாவிற்குள் நுழைந்து, 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிப் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.