பிளாஷ்பேக் : வினு சக்கரவர்த்தியின் நிறைவேறாத கனவு
தமிழ் சினிமாவில் 250 படங்களுக்கு மேல் வில்லனாகவும் குணச்சித்ர வேடங்களிலும் நடித்தவர் வினு சக்கரவர்த்தி. தனது தனித்துவமான குரல், முரட்டுத்தனமான தோற்றம் இவற்றால் தனித்து தெரிந்தார்.
மதுரையைச் சேர்ந்த வினு சக்கரவர்த்தி சிறு வயதில் நாடகங்களில் நடித்தார். பின்னர் நாடகங்களை இயக்கி, தயாரித்து, அரங்கேற்றினார். அவர் இயக்கிய நாடகங்களில் ஒன்றான 'ரங்கநாயகி' என்ற நாடகத்தை கர்நாடக மாநிலம் மைசூரில் நடத்தினார். அந்த நாடகத்தை பார்க்க வந்த கன்னட இயக்குனர் குட்டண்ணா கனகல் நாடகத்தால் ஈர்க்கப்பட்டு அதனை திரைப்பட உரிமத்தை 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார்.
சினிமா இயக்கும் ஆசையிலிருந்த வினு சக்கரவர்த்தி குட்டண்ணா கனகலிடம் உதவியாளராக சேர்ந்து 5 படங்கள் வரை பணியாற்றினார் பின்னர் தமிழ் படத்தை இயக்கும் ஆசையில் சென்னை திரும்பிய அவர் சிவக்குமார் நடித்த 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவே திரைக்கதை வசன வாய்ப்புகள் அதிகமாக வந்தது. கோவில் புறா, பொண்ணுக்கேத்த புருஷன் உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார்.
'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதச் சென்றவர், அந்தப் படத்தில் நடிகர் ஆனார் 'உன்னிடம் ஒரு நடிகன் இருக்கிறான் அவனை தவற விட்டு விடாதே' என்று பாரதிராஜா சொல்ல அதன் பிறகு முழு நேர நடிகரானார்.
ஏராளமான கதைகளை எழுதி வைத்திருந்த வினு சக்கரவர்த்தி அதனை இயக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். ஆனால் அந்த கனவு நிறைவேறவில்லை. கடைசியாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஒரு படம் அவர் இயக்குவதாக இருந்தது. அந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு வினு சக்கரவர்த்தி காலமானார்.