விஜய் ஆண்டனி ஏன் செருப்பு போடுவதில்லை? அந்த எளிய வாட்ச் கட்டுவது ஏன்?
மு.மாறன் இயக்கத்தில் விஜய்ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் 'அப்பா குட்டி' படம், நவம்பர் 20ம் தேதி வெளியாகிறது. சென்னையில் நேற்று நடந்த ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்டில் விஜய்ஆண்டனி மனைவி பாத்திமா, அவர் இளைய மகள் லாரா ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பாத்திமா ஆண்டனி பேசுகையில், ''மூத்த மகள் மீரா மறைந்தபின் சினிமா விழாவில் கலந்து கொள்ளவில்லை. 5 ஆண்டுகளுக்குபின் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். விஜய்ஆண்டனி செருப்பு அணிவதில்லை. அதற்கு காரணம் இருக்கிறது.
மீராவுக்காக ஏகப்பட்ட செருப்பு, ஷூ வாங்கி வைத்து இருந்தோம். ஒரு அறை முழுக்க அது இருக்கிறது. அதை பார்த்துவிட்டு விஜய் ஆண்டனி இந்த முடிவை எடுத்துள்ளார். சில பெரிய ஷோ நடத்தும்போது மட்டும் ஷூ அணிகிறார். அவரிடம் ஏகப்பட்ட விலை உயர்ந்த வாட்ச் இருக்கிறது. ஆனால், ரூ.3,900 மதிப்புள்ள வாட்ச் மட்டுமே அணிகிறார். அது மீரா கடைசியாக அவரது கையில் கட்டியிருந்தது. என்னையும், என் தங்கையையும் என் அப்பா 7 வயதில் விட்டு போய்விட்டார். எனக்கு அந்த பாசத்தை கொடுத்தது விஜய் ஆண்டனிதான். பலருக்கும் அப்பாதான் ஹீரோ'' என பேசினார்.
அதேபோல் மகள் மீரா இருந்த அறைக்கு விரைவில் மாற உள்ளதாகவும் கூறினார். விஜய்ஆண்டனி, பாத்திமாவின் இளைய மகள் லாராவும் இந்த நிகழ்ச்சியில் வந்து பேசினார். ''இந்த நிகழ்ச்சியில் லாரா எப்படி பேசப்போகிறார் என நினைத்தேன். அவர் சிறப்பாக பேசிவிட்டார். கடந்த 15 ஆண்டுகளாக போராடி வரும் இயக்குனர் மு.மாறனுக்காக இந்த படம் ஜெயிக்க வேண்டும். மூத்த மகள் மீராவை இப்படி பேச வைக்க தவறிவிட்டேன் , இந்த படம் பார்க்கும் பலரும் தங்கள் அப்பாவிடம் போனில் பேசுவார்கள். இந்த படத்தில் வரும் அப்பா பாடல் நுாறு சாமி அளவுக்கு ஹிட்டாகும்'' என்றார் பாத்திமா.
கடைசியில் விஜய் ஆண்டனி பேசுகையில் பாத்திமா கண் கலங்கினார். அப்பாகுட்டி அப்பா, மகள் பாசக்கதை என்பதால் பாத்திமா, மகளுடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாக தகவல்.