"என்னை பார்க்காமல் தனுஷால் தூங்க முடியாது" ; மம்முட்டியின் கலகலப்பான பேச்சு
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம்' திரைப்படம் வரும் நவம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் தனுஷ் பேசும்போது, 13 வருடத்திற்கு முன்பு மம்முட்டியுடன் மலையாளத்தில் 'கம்மத் அண்ட் கம்மத்' என்கிற படத்தில் நடித்த போது அவரைப் பார்த்த வகையில் அவர் முரட்டுத்தனமானவர் என்று நினைத்தேன். இந்த 'ஓம்' படத்தில் நடித்த போதுதான் அவரது நிஜமான கலகலப்பான குணம் எனக்குத் தெரிய வந்தது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கொச்சியில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் மம்முட்டி தனுஷ் குறித்து பேசும்போது, முதலில் என்னைப் பார்த்த போது தனுஷ் கொஞ்சம் விலகியே இருந்தார். ஆனால், நான் அவரை அப்படி விட்டுவிடுவேனா என்ன? அவரை இழுத்து அணைத்துக் கொண்டேன். இப்பொழுது என்னை பார்க்காமல் அவரால் தூங்கக்கூட முடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்டார். இப்படித்தான் அவரை என்னுடன் நெருக்கமாக்கிக் கொண்டேன் என்று கூறினார். மம்முட்டியின் இந்த கலகலப்பான பேச்சு அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.