உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சோனாக்சி சின்ஹா மார்பிங் புகைப்பட விவகாரம்; கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்த நீதிமன்றம்

சோனாக்சி சின்ஹா மார்பிங் புகைப்பட விவகாரம்; கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்த நீதிமன்றம்


சமீப காலமாகவே பிரபல நடிகைகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடும் பணியை சில விஷமிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இது பற்றி அவ்வப்போது புகார்கள் வருவதும், போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிப்பதும் தொடர்கதையாக இருக்கிறது. அந்த வகையில் 'லிங்கா' படத்தில் கதாநாயகியாக நடித்த பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா, தனது புகைப்படங்களை டில்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் என புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் 14ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில் இறங்கிய போலீசார், டில்லியில் வசிக்கும் ஆர்.என்.தீபக் ஜெயின் என்கிற நபரை அன்றைய தினமே கைது செய்தனர். பின்னர் அவரை விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து வந்து பாந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் அவரை போலீஸ் காவலில் விசாரிக்க 3 நாட்கள் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட நபர் சார்பாக ஆஜரான அவரது வழக்கறிஞர்கள், இந்த கைது நடவடிக்கை முறையற்றது என்றும், கைதுக்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை என்று வாதிட்டனர்.

மேலும் வெளிமாநிலத்தில் கைது செய்யும்போது முதலில் அங்குள்ள உள்ளூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தாமல் நேரடியாக விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வந்துள்ளனர் என்றும், புகார்தாரரின் (சோனாக்சி சின்ஹா) செல்வாக்கு காரணமாகவே போலீசார் இப்படி விதிகளை மீறி அவசரகதியில் செயல்பட்டுள்ளனர் என்றும் வாதங்களை முன்வைத்தார்கள். எதிர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், போலீசாரின் மூன்று நாள் கஸ்டடி கோரிக்கையை நிராகரித்ததுடன், அவரது கைது சட்டவிரோதமானது என அறிவித்து அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !