உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மன்னர் வகையறா கடன் வழக்கு : விமலின் மனு தள்ளுபடி

மன்னர் வகையறா கடன் வழக்கு : விமலின் மனு தள்ளுபடி

நடிகர் விமல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தானே தயாரிப்பாளராக மாறி 'மன்னர் வகையறா' என்கிற படத்தை தயாரித்து நடித்தார். இந்த படத்திற்காக கோபி என்கிற பைனான்சியரிடம் நாலரை கோடி அவர் கடன் வாங்கி இருந்தாராம். ஆனால் படம் வெளியான பின்பும் கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என்றும் அதன்பிறகு அதற்காக அவர் வழங்கிய காசோலை வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்ததாகவும் கூறி பைனான்சியர் கோபி நடிகர் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை 11வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி விமலுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இருந்தாலும் விமல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து சில நிபந்தனைகளுடன் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அதேசமயம் விமல் தனக்கு எதிரான காசோலை மோசடி வழக்கில் பயன்படுத்தப்பட்ட சில ஆவணங்கள் மற்றும் காசோலை விவரங்கள் முறையற்றவை என்றும் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கீழமை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ஆனால் அது தொடர்பான விசாரணை ஏற்கனவே முடிந்து விட்டதால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என நீதிமன்றம் அதனை திருப்பி அனுப்பியது.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார் விமல். தற்போது இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே இளந்திரையன் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த விதமான சட்ட விதிகளும் மீறப்படவில்லை என்றும் இதில் தலையிட அவசியமில்லை என்றும் கூறி விமலின் மனுவை அதிகாரப்பூர்வமாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் விமல் ஓராண்டு சிறை செல்ல நேருமா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !