உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அதிமனோகரம்' படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு வேண்டாம் ; தயாரிப்பாளர் முன்னெச்சரிக்கை அறிவிப்பு

'அதிமனோகரம்' படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு வேண்டாம் ; தயாரிப்பாளர் முன்னெச்சரிக்கை அறிவிப்பு


கடந்த வருடம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'தொடரும்'. 200 கோடிக்கு மேல் வசூலித்த இந்தப்படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். இந்த நிலையில் சூட்டோடு சூட்டாக மீண்டும் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் தற்போது 'அதிமனோகரம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் சபரிமலை சன்னிதானத்தில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.

மோகன்லால் மீசையை முறுக்கியபடி ஆக்ஷன் மூடில் இருப்பது போல சமீபத்தில் சில புகைப்படங்களும் போஸ்டர்களும் வெளியாகின. ஆனால் உடனே இந்தப் படம் மோகன்லாலின் 'ஆறாம் தம்புரான்' அல்லது 'நரசிம்மம்' போன்ற ஒரு மாஸ் ஆக்ஷன் படமாக இருக்குமோ என்று நினைத்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை வளர்த்துக்கொண்டு ஏமாற வேண்டாம். இந்தப் படம் தருண் மூர்த்தியின் தனித்துவமான கதை சொல்லும் பாணியில் உருவாகும் ஒரு திரைப்படமே தவிர வழக்கமான கமர்சியல் மாஸ் படம் அல்ல என்று படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் இப்போதே ரசிகர்களுக்கு முன்னெச்சரிக்கை தகவலாக குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் தியேட்டர்களில் ரசிகர்கள் ரசிக்கும்படியான பல அருமையான தருணங்கள் இப்படத்தில் நிச்சயம் இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !