உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: மூன்று திரை ஆளுமைகள் எம் ஜி ஆரோடு இணைந்து பயணித்த முதல் திரைப்படம்

பிளாஷ்பேக்: மூன்று திரை ஆளுமைகள் எம் ஜி ஆரோடு இணைந்து பயணித்த முதல் திரைப்படம்


எம் ஜி ஆர் ஒரு உச்ச நட்சத்திரமாக அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களில் நடித்து வந்த 1960களில், அவருடைய பெரும்பாலான திரைப்படங்களில் அவருக்கு ஏற்ற ஜோடியாக, அவருடன் வெள்ளித்திரையைப் பகிர்ந்து கொண்டு, பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை பி சரோஜா தேவி. “திருடாதே”, “தாய் சொல்லைத் தட்டாதே”, “தாயைக் காத்த தனயன்”, “குடும்பத் தலைவன்”, “பாசம்” என இந்த வெற்றிக் கூட்டணி இணைந்து நடித்த திரைப்படங்களின் வரிசையில் வந்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம்தான் “பணத்தோட்டம்” என்ற திரைப்படம்.

சி என் அண்ணாதுரை எழுதிய ஒரு புத்தகத்தின் பெயரான “பணத்தோட்டம்” என்ற பெயரிலேயே வெளிவந்த இத்திரைப்படம்தான் மூன்று திரை ஆளுமைகளை எம் ஜி ஆரோடு இணைந்து பணிபுரிய வைத்த முதல் திரைப்படமாக வெளிவந்தது. “கலங்கரை விளக்கம்”, “சந்திரோதயம்”, “குடியிருந்த கோயில்”, “அடிமைப் பெண்”, “பல்லாண்டு வாழ்க” என எம் ஜி ஆரின் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கே சங்கர் எம் ஜி ஆரை வைத்து இயக்கிய முதல் படமாக வெளிவந்த திரைப்படம்தான் இந்த “பணத்தோட்டம்”. அதே போல் படத்தில் எம் ஜி ஆரோடு இணைந்து பங்கு பெற்ற காட்சிகள் ஏதும் படத்தில் இடம் பெறாமல் போயிருந்தாலும், நடிகர் நாகேஷ் ஒரு நகைச்சுவை நடிகராக எம் ஜி ஆரின் படத்தில் நடித்த முதல் திரைப்படமாக வந்ததும் இந்த “பணத்தோட்டம்” திரைப்படமே.

“படகோட்டி”, “கலங்கரை விளக்கம்”, “சந்திரோதயம்”, “குடியிருந்த கோயில்” போன்ற எம் ஜி ஆரின் வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளரான ஜி என் வேலுமணி எம் ஜி ஆரை வைத்து தயாரித்த முதல் திரைப்படமும் இந்த “பணத்தோட்டம்”. அந்த வகையில், மூன்று முக்கிய திரை ஆளுமைகள் எம் ஜி ஆரோடு முதன் முதலாக இணைந்து பணிபுரிய காரணமாய் அமைந்த இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுக்கக் கூட முடியாத அளவிற்கு அப்போது பிஸியாக இருந்த நடிகை பி சரோஜாதேவி, இத்திரைப்படத்திற்காக காலை 7 மணி முதல் 9 மணி வரை நேரம் ஒதுக்கி, ஒன்பதே நாட்களில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை அவர் நடித்து முடித்துக் கொடுத்த திரைப்படமாகவும் பார்க்கப்பட்ட திரைப்படம்தான் இந்த “பணத்தோட்டம்” திரைப்படம்.

எம் ஜி ஆர், பி சரோஜா தேவி, ஷீலா, எம் என் நம்பியார், எஸ் வி சுப்பையா, எம் வி ராஜம்மா, எஸ் ஏ அசோகன், நாகேஷ், ஏ வீரப்பன் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞர் கண்ணதாசன் எழுத, இசையமைத்திருந்தனர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி. “பேசுவது கிளியா”, “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே”, “ஜவ்வாது மேடையிட்டு”, “ஒரு நாள் இரவு” என படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, 1963ம் ஆண்டு பொங்கள் திருநாளை முன்னிட்டு வெளிவந்த இத்திரைப்படம், அன்றைய நாளில் ரசிகர்களிடமிருந்து ஒரு நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படமாகவும் அமைந்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !