உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லைட்டா காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் தமிழ் சினிமா !

லைட்டா காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் தமிழ் சினிமா !

இன்னுமொரு புத்தாண்டில் காலடி எடுத்து வைக்க சரியாக இரு மாதங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு நம் தமிழ் சினிமாக்காரர்கள் லைட்டாக காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு, வழக்கத்தைவிட அதிகமான சில நல்ல படங்களும், வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களும் அதிகரித்திருக்கின்றன. அந்த கணக்கு வழக்குகளை வருடக் கடைசியில் வைத்துக் கொள்வது சரியாக இருக்கும் என்கிற நிலையில், மாற்றுமொழி இயக்குநர்கள் தமிழில் படம் இயக்க ஆர்வமாக இறங்குகிறார்கள் என்கிற இன்னும் கொஞ்சம் உற்சாகமான செய்தி இது.

தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத பிறமொழி இயக்குநர்கள் ஆரம்பகாலம் தொட்டே தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்திருக்கிறார்கள் என்பது தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸிலிருந்து [ 1931 ] துவங்குகிறது. இப்படத்தை இயக்கிய எச்.எம் ரெட்டி ஆந்திராக்காரர். அவரை அடுத்து எல்லிஸ்.ஆர்.டங்கன், தாதா மிராசி, எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்துலு வழியாக பரதன், பாசில், பிரியதர்ஷன் வரை மிக நீண்ட பட்டியல் உண்டு. இவர்களில் பலரும் தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு இணையாக பல சில்வர் ஜூப்ளி படங்கள் கொடுத்தவர்கள்.

தற்போது பான் இந்தியா டிரெண்ட் துவங்கி, எந்தப் படத்தை எந்த மொழியில்தான் எடுக்கிறார்கள் என்பதே குழப்பமாக இருக்கும் நிலையில், சகமொழி இயக்குநர்களில் பலர் தமிழுக்கு மரியாதை கொடுத்து நேரடி தமிழ்ப் படங்களை இயக்க ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதுதான் நாம கொஞ்சம் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளலாம் மொமண்ட்.

இந்தப் பட்டியலில் டாப் ரேஞ்சில் இருப்பவர் பால்கி. இவரது பூர்விகம் என்னவோ தஞ்சாவூர்தான் என்றாலும் ஒரிஜினல் அடையாளம் என்பது இந்தி சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் என்பதுதான்.

அமிதாப்பை வைத்து 'சீனி கம்' 'பா', 'ஷமிதாப்' உள்ளிட்ட பல தரமான படங்களை இயக்கியிருக்கும் பால்கி தனது பெரும்பாலான படங்களுக்கு இளையராஜாவை இசையமைப்பாளராக வைத்துக் கொண்ட அவரது தீவிர ரசிகர். அந்த ரசிகர் தற்போது ராஜாவுக்காகவே தனது ஹிந்தி மார்க்கெட்டைப் பொருட்படுத்தாமல் நேரடி தமிழ்ப் படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் எட்டுப் பாடல்கள் என்பது ராஜா ரசிகர்களுக்கு தீபாவளி ஸ்வீட். ஒளிப்பதிவு பால்கியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான நம்ம பி.சி.ஸ்ரீராம்.

• அடுத்த படம் சூர்யா, ஜித்து மாதவன் காம்போவின் 'சீன்'. இது மலையாளத்தில் ஷூட் செய்யப்பட்டு தமிழில் டப் செய்யப்படுகிறது என்று கதை கட்டப்பட்ட நிலையில் 'இது மலையாளத்தில் உருவாக்கப்பட்டு தமிழுக்கு டப் செய்யப்பட்ட கதை அல்ல. எனது நேரடி முதல் தமிழ்ப் படம் என்று இயக்குநர் ஜித்து மாதவன் தமிழிலேயே சத்தியம் செய்கிறார். படத்தில் சூர்யா பாத்திரத்தின் பெயரே டி.எஸ்.பி. இன்பராஜ் என்பதுதான்.

• சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் நடிப்பில், கடந்த மாதம் ரிலீஸான 'என்ன விலை?' படம் குறித்தும் இவ்வாறான செய்திகள் பரவின. படம் ரிலீஸாகி திரையரங்குகளில் பார்த்தபோதுதான் அது முழுமையாக தமிழில் இயக்கப்பட்ட படம் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.

• இவ்வரிசையில் அடுத்த படம் 'ஜீவா 49' என்று பெயரிடப்பட்டுள்ள ஜீவாவின் அடுத்த படம். இதற்கு முன்னர் வெளியாகி ஹிட் அடித்த ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தை இயக்கியவர் மலையாள இயக்குநரான நிதிஷ் சஹதேவ். அதே செண்டிமென்டில் தனது 49வது படத்தையும் 'கப்பேலா' படம் கொடுத்த பிரபல மலையாள இயக்குநரான முகம்மது முஸ்தபாவிடம் ஒப்படைத்திருக்கிறார் ஜீவா.

• தமிழில் படம் இயக்கி முடித்திருக்கும் இன்னொரு கேரள இயக்குநர் விஷ்ணு சசி சங்கர். சூர்யாவை வைத்து 'பேரழகன்' படத்தை இயக்கிய சசி சங்கரின் வாரிசான இவர் வைபவ்வை நாயகனாக வைத்து 'மணிகண்டா' படத்தை இயக்கியுள்ளார்.

• 'மகாராஜா', 'பத்தா' ஹிட்களுக்கு அடுத்து ரிலீஸாகவிருக்கும் விஜய் சேதுபதியின் அடுத்த படம் 'ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்'. தெலுங்கின் டாப் ரேஞ்ச் இயக்குநர்களில் ஒருவரான பூரி ஜெகநாத் இயக்கியுள்ள இப்படம் பான் இந்தியப் படம் என்று சொல்லப்பட்டாலும் இயக்குநரின் தமிழ் அறிமுக ஆர்வத்தால் 90 சதவிகிதம் தமிழில்தான் எடுக்கப்பட்டது என்கிறார்கள்.

ஆர்வத்துடன் தமிழ்ப்படம் இயக்கும் இந்த இயக்குநர்கள் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் பிரபல கன்னட இயக்குநரான ஹரி சந்தோஷ். கன்னடத்தில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த சந்தோஷ் தமிழில் முதல் முறையாக சசி குமார், நரேன், அஞ்சலி நாயர், சுவாசிகா ஆகியோர் இன்னும் பெயர் சூட்டப்படாத படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இன்னும் சில பிறமொழி காம்போக்கள் பேச்சுவார்த்தை லெவலில் இருக்கின்றன.

இந்த இயக்குநர்களின் வரவு வழக்கமான தமிழ் சினிமா மசாலாக்களிலிருந்து கொஞ்சமாவது ரசிகர்களைக் காப்பாற்றும் என்று நிச்சயம் நம்பலாம். எனவே தமிழ் சினிமா நடிகர்களே சென்றிடுவீர் எட்டுத்திக்கும் சகமொழி நல்ல இயக்குநர்களை கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !